முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி (Kayalvizhi Alagiri) இன்று தவெகவில் (TVK) இணைய திட்டமிட்டிருந்தார். ஆனால் கயல்விழி கேட்கும் ‘உத்தரவாத’த்தை தவெக தலைமை தராததால் இன்று அவர் அக்கட்சியில் இணையவில்லை.
அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பலர் இன்று தவெகவில் இணைந்தனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், பாஜகவின் விஜயதாரணி உள்ளிட்டோர் இன்று ஜூன் 13-ந் தேதி தவெக பொதுச்செயலாளர்களான அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
மேலும் தவெகவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி இன்று இணைவதாக இருந்தது. ஆனால் இன்று தவெகவில் கயல்விழி இணையவில்லை.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, “முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சிக்கும் கயல்விழி அழகிரி வந்திருந்தார். இதன் பின்னர் தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களையும் சந்தித்தார் கயல்விழி.
தவெகவில் இணைய விரும்பிய கயல்விழி அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை தவெகவிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் தவெக தரப்பில் இதுவரை அத்தகைய உத்தரவாதம் தரப்படவில்லை. இதனால் கயல்விழி அழகிரி இன்று தவெகவில் இணையவில்லை என்கின்றனர்.
