திமுக துடைத்தெறியப்படும் என்ற அமைச்சர் ஷாஜகான் பேச்சுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஐயூஎம்எல் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், “வருங்காலத்தில் தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி தொடர்ந்தால், திமுக முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும்” என்று விமர்சித்துப் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் இடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.

“திமுக தயவில் வெற்றி பெற்று திமுகவை விமர்சனம் செய்யும் பச்சோந்தி ஷாஜகானே மன்னிப்புக் கேள்!” என திமுக குறித்து ஆணவமாக பேசிய, அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் ஷாஜகான் விமர்சனத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் கடுமையான உழைப்பால் தேர்தலில் வெற்றி பெற்று, இன்றைக்கு அமைச்சராகப் பதவியேற்றுள்ள இந்த நிலையில், “ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான் அமையும்; திமுக இதில் தலையிட முடியாது, திமுகவை முற்றிலுமாகத் துடைத்தெறிவோம்” என்று பேசியிருப்பது மிகப்பெரிய ஆணவத்தின் வெளிப்பாடாகும்.

ADVERTISEMENT

மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜுக்காகக் கல்லறை கட்டினார். ஆனால், இந்த ஷாஜஹானோ தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சியின் அருமை பெருமைகளுக்கும், சிறப்புகளுக்கும் சமாதி கட்டக்கூடிய வேலையைச் செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது” என விமர்சித்தார்.

திமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் இல்லை என்று கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்கவில்லை என்று கூறுவது திட்டமிட்டு பரப்பப்படக்கூடிய ஒரு தவறான பிரச்சாரமாகும். தேர்தல் முடிந்த சில நாட்களில், தேர்தல் முடிவுகள் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விரிவான ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதில் ஒரு கட்டுரையில், தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்குத்தான் சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகள் பெருமளவில் கிடைத்துள்ளன என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பாளையங்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மேற்கு, வாணியம்பாடி, ஆம்பூர், திருவண்ணாமலை, பாபநாசம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள்தான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இவை யாவும் முஸ்லிம் வாக்குகள் திமுக கூட்டணிக்குத்தான் சென்றுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளாகும்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தவெகவினரால் வெற்றியே பெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இப்படியொரு பொய்மையான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது” என்று அவர் விளக்கமளித்தார்.

தவெக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பேசுகையில், “தவெக அரசு தேர்தலுக்கு முன்பு மக்களுக்குக் கொடுத்த பல வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இலவச மின்சார விவகாரத்தில், ஒரு யூனிட் கூடுதலாகப் போனாலும் இலவச மின்சாரம் கிடையாது என்கிற நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் மாதம் 2,500 ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அரசு கஜானா காலியாகிவிட்டது என்று காரணம் கூறுகிறார்கள். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ‘ஒரு அரசின் கருவூலம் எப்போதும் காலி ஆகாது; பணம் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. எனவே கஜானா காலி என்ற வாதமே தவறானது’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியிருக்க, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 2,500 ரூபாய் எங்கே என்று இன்றைக்குப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களிடம் இருந்து மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகுதான், முந்தைய திமுக அரசு கொண்டு வந்த 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையே இப்போது வழங்கப்பட்டு வருகிறது” என்று ஜவாஹிருல்லா குற்றம் சாட்டினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share