தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிமுக என இரு முக்கிய கட்சிகள் தோல்வியடைந்தன. புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது.
இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான மே 4ம் தேதி முதல் தமிழக அரசியல் பரபரப்பாகவே இருந்து வந்தது.
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும் இரு முக்கிய கட்சிகளின் ஆதரவுடன் திருமாவளவன் முதல்வர் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்,விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. இதில் இடதுசாரிகளை தவிர பிற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமும் கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக புதிய தலைமுறை ஊடகத்திடம் விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அதில், “முதலில் எடப்பாடி தான் முதலமைச்சர் என்று அவர்களிடம் உள்ள செகண்டரி சோர்சஸ், தேர்ட் சோர்சஸ் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் வந்து அமைச்சரவையில் பங்கேற்பது என்ற மாதிரி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அண்ணா திமுக தரப்பில் இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. அதேசமயம் இன்னொரு கருத்தும் வந்தது.
அவர்கள் இரண்டாக உடைந்து விட்டார்கள்… சிவி சண்முகம் வீட்டில் ஒரு பக்கம் கூட்டம் நடக்கிறது, எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்னொரு பக்கம் கூட்டம் நடக்கிறது.
இப்படி எல்லாம் போய்க் கொண்டிருந்தபோது மே 8ம் தேதிக்கு மேல் ஒரு டெவலப்மெண்ட் வருகிறது.
என்னுடைய காதுக்கு என்ன தகவல் வந்தது என்றால், ஏன் ஒரு பொதுவான நபரை போடக்கூடாது. அந்த பொதுவான நபராக திருமாவளவனை போடலாமா? என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது.
அதேசமயம், இது போன்றெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. தலைவர்களாக உள்ளவர்களிடம் இருக்கும் மெச்சூரிட்டி, அடுத்த நிலையில் இருப்பவர்களிடம் இருக்காது. எம்எல்ஏக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மாதிரியான பேச்சுகள் தப்பாதான் போய் முடியும். தமிழ்நாட்டு அரசியலில் அது நடக்காது என்று சொல்லிவிட்டு நாங்கள் வந்து விட்டோம் அவ்வளவுதான்.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை காசிப் என்று சொன்னதற்கு இதுதான் காரணம்.
ஏனென்றால் உங்களை முதலமைச்சராக்கப் போகிறோம். இடதுசாரிகளிடம் பேசிவிட்டோம். ஐயுஎம்எல் கட்சியிடம் பேசி விட்டோம். பாமக விடம் பேசிவிட்டோம் என்றெல்லாம் யாரும் எங்களிடம் சொல்லவில்லை.
இன்னொன்று பிஜேபியையும் சேர்த்தால்தான் அந்த 117 வரும். இல்லையென்றால் வராது. இப்படி சாத்தியக்கூறு மிக மிக குறைவாக இருந்தது.
எனவே இதையெல்லாம் நாம் வேடிக்கையாக தான் எடுத்துக் கொள்ள முடியும். இதை எப்படி அதிகாரப்பூர்வமான பேச்சு என்று நம்ப முடியும். அதை நாங்கள் நம்பவில்லை. அதனால்தான் அது ஒரு காசிப் என்று சொன்னேன்” என்று கூறினார்.
மேலும் அவர் ‘அரசியலில், தன்னுடைய அரசியல் எதிரி யார் என்று தீர்மானிக்கும் போது அவர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று முயற்சி எடுப்பது தவறு கிடையாது. அது பொலிட்டிக்கல் எத்திக்ஸ்’ என்றார்.
முதல்வர் விஜய்க்கு 107 சீட் என்பது எப்படி மக்களின் தீர்ப்போ… அதுபோலத்தான், அவருக்கு எதிராக இவர்களுக்கு ஓட்டு போட்டதும் மக்கள் தீர்ப்பு தானே.
அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டு மக்கள் 120 இடம் கொடுத்திருப்பார்களே. ஏன் இவருக்கு 120 இடம் கிடைக்கவில்லை.
அப்படி இருக்கும்போது அவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம் தானே.
107 இடம்தான் கொடுத்திருக்கிறார்கள். தனிப்பெரும் கட்சியாக இருக்கலாம். ஆட்சி அமைக்கலாம் என்று ஆர்டர் போடவில்லை. அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் தான் எடுத்திருக்கிறோம். அதுவும் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற நாங்கள்தான் முடிவெடுத்து இருக்கிறோம்.
இதை மக்கள் தீர்ப்பு (பீப்பிள்ஸ் மேன் டேட்) என்று சொல்ல முடியாது.
திமுகவோ அதிமுகவோ அப்படி ஒரு முயற்சி எடுத்து இருந்தால் அவர்கள் பார்வையில் இருந்து அதை தவறு என்று சொல்ல முடியாது. பொலிட்டிக்கல் எத்திக்ஸ் என்ற முறையில் அதிமுகவும் திமுகவும் எதிரியாக இருந்தார்கள், இப்போது எப்படி ஒன்று சேர முடியும் என்று நாம் சொல்லலாம்.
அது ஒரு அரசியல் அறம் என்ற அடிப்படையில் நாம் பேசலாமே தவிர, உண்மையாக அரசியல் செய்கிறவர்கள் களத்துக்குள் இருக்கிறவர்கள் அதை அப்படி பார்க்க முடியாது. அவர்களுடைய சர்வைவில் இருந்து தான் பார்ப்பார்கள்” என்று கூறினார்
”காங்கிரஸ் உடனடியாக முடிவெடுத்து சென்று விட்டது. அடுத்ததாக இடதுசாரிகள் முடிவெடுத்தனர். நான் ஒரு நாள் கழித்து தான் முடிவெடுத்தேன். இந்த ஒரு நாளில் தான் எனக்கு இந்த தகவல்கள் எல்லாம் வந்தது. அதை தொடக்கத்திலேயே நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். நான் கடிதம் கொடுத்த பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீங்கள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் கொஞ்சம் பொறுங்கள் என்றார்கள். உங்கள் பெயரை பிரஸ்ஸில் அறிவிக்கப் போகிறோம் என்றார்கள். அதற்கு நான், இல்லைங்க நான் பேப்பர் கொடுத்து விட்டேன்… இன்னும் இரண்டு நிமிடத்தில் செய்தியாளார்களை சந்திக்க போகிறேன், சாரி… என்று சொல்லிவிட்டேன்” எனவும் குறிப்பிட்டார்.
