அதிமுகவில் (AIADMK) இருந்து தாம் விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் (C.Vijayabaskar) அறிவித்துள்ளார்.
விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இன்று (ஜூன் 16) சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுகவில் இருந்தும் விலகுவதாக சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

இது தொடர்பாக சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ‘அம்மா’ என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவப் பருவத்திலிருந்தே 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.
எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.

ஜெயலலிதா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன்.
எடப்பாடியின் தவறான முடிவுகளால்..
ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
அதிமுகவில் இருந்து விலகுகிறேன்..
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த இரத்தத்தின் இரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.
நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து..
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும்..
என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.. தொடர்வேன்! இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
