அமைச்சர் செங்கோட்டையன், எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து கடந்த மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகி, மே 10ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்கள் மட்டுமே தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய சட்டபூர்வ கால அவகாசம் உள்ளது.
இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதற்கு எதிராக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏவும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதுபோன்று அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிராகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்ல சிவத்தை விட 16, 620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘செங்கோட்டையன் தனது வேட்பு மனுவில் சொத்து, குற்ற வழக்கு விவரங்களைத் தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தில் தகவல்களைச் சான்றளித்துக் கையெழுத்திட்டுள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டது. அதனால் அவரது வேட்பு மனுவை ஏற்றது முறையற்றது. எனவே செங்கோட்டையன் வெற்றி பெற்றதைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதுபோன்று, ’லால்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை விட 2,739 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளரான லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாரி வள்ளல் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘லீமா ரோஸ் 7 நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விபரங்களை மறைத்துள்ளார். அதிமுக துண்டை அணிந்து கொண்டு தேவாலயங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுபோன்று புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக எம்எல்ஏ முத்துராஜுவின் வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஷெரிப் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்
