அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில், ‘எடுத்தற்கெல்லாம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது’ என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய நான்கு பேர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இது தொடர்பாக உச்ச உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”கடந்த மே 13ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அது நிலுவையிலிருந்த போதே, கடந்த மே 26 ஆம் தேதி மேற்குறிப்பிட்ட 4 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இவர்களுக்குத் தலைமைச் செயலகத்திலேயே தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இடைத்தேர்தலிலும் இவர்களுக்கு சீட் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அரசியல் லாப நோக்குடன் இவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைத்தேர்தலுக்கு 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்பதால் லாப நோக்குடன் ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறிய நான்கு பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ”ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகிப்பதற்கு உங்களிடம் முதற்கட்ட ஆதாரம் என என்ன உள்ளது?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஒரு தனிநபராக ஆதாரங்களைத் திரட்ட முடியாது என்பதால் சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, ”ஏதேனும் தவறு நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் சிலவற்றையாவது மனுதாரர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தொடங்க சட்டப்பேரவை தலைவருக்கு அதிகாரம் உள்ளது. எடுத்தற்கெல்லாம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்த நாளிலேயே ஆளுங்கட்சியில் இணைந்துள்ளதால் பெருந்தொகை சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுகிறது என்று மனுதாரர் சார்பில் கூறப்பட்டது.
இந்த வாதத்தைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்
