முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏவும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில், ‘விஜய் தேர்தல் சமயத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.
வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை வேட்புமனுவில் மறைத்துள்ளார்.
கட்சி துண்டு அணிந்து தேவாலயம் சென்று வழிபாடு நடத்தினார்
தேர்தல் செலவு கணக்கு விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ரூட் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
இதுபோல பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
இந்த தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
