‘விவசாயப் பெருமக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்’ பயிர்கடன் தள்ளுபடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமென கடந்த மே 25 ம் தேதி முதல்வர் அறிவித்து இருந்தார். பல தரப்பினரும் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 16) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியில், அனுபவம் இல்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது முதலமைச்சர் தலைமையிலான TVK அரசு. தேர்தல் நேரத்தில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், ஆட்சிக்கு வந்தால் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று TVK அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் 50,000/- ரூபாய் வரை கடன் பெற்ற குறு. சிறு விவசாயிகளின் கடன் தொகை முழுமையாகவும்; 50,000/- ரூபாய்க்கு மேல் பெற்றவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று இந்த அரசு அறிவித்தது.

ADVERTISEMENT

விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடன் தள்ளுபடி அறிவித்ததற்கு எதிராக கழகத்தின் சார்பிலும், அனைத்து விவசாய சங்கங்களின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அரசுக்கு விவசாயிகளிடையே எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்தவுடன் இப்போது, மீண்டும் ஒரு இன்ஸ்டால்மெண்ட் பாணியில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 75,000/-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன்
பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்: ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமை தூக்கும் ஒட்டகம் பாரம் தாங்காமல் உட்காரும்போது, அதை ஏமாற்றுவதற்காக ஒட்டகத்தின் முதுகில் இருந்து சிறு மூட்டை ஒன்றை அதன் கண்முன்னால் முதலாளி இறக்கி வைத்தவுடன் அந்த ஒட்டகம் எழுந்து நடக்கும். அதுபோல் விவசாயிகளின் சுமையைக் குறைப்பதாக ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் மாட்டார்கள்.

ADVERTISEMENT

தமிழக குறு, சிறு விவசாயிகள் ஒரே சமூகப் பொருளாதார நிலையில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களிடையே பெரிய அளவு பொருளாதார ஏற்றத் தாழ்வு கிடையாது.
இந்த வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல், விளிம்பு நிலையில் உள்ள அவர்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரே நிலையில் உள்ள குறு, சிறு விவசாயிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில், தற்போது அறிவித்துள்ள “ரூ. 75,000/- வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு கடன் தள்ளுபடி. மற்ற விவசாயிகள் அனைவருக்கும் ரூ. 35,000/- வரை தள்ளுபடி” என்ற அறிவிப்பு சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றாகும். பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றார்போல் கடன் அளவும் வேறுபடும் என்பதை TVK அரசு உணரவில்லை.

‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’என்பதை மறந்து மனம்போன போக்கில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று, துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும். உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சோற்றில் கை வைக்க முடியும்’ என்பதை அனுபவமற்ற முதலமைச்சருக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

எனவே, TVK தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்ட முதல்வர் விஜய் அவர்களே…!

கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மொத்தக் கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, உங்கள் முதிர்ச்சியற்ற நிர்வாகத்திற்கான மற்றொரு சான்று.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடனை எப்போது முழுமையாக ரத்து செய்வீர்கள் என்று கேட்டால், ரூ. 50,000, ரூ. 75,000 என கந்து வட்டிக்காரன் போல கடன் வரம்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதிலும் ரூ. 75,000 வரை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தான் 100% தள்ளுபடி எனவும், அதற்கு மேல் கடன் இருந்தால் வெறும் ரூ. 35,000 வரை மட்டுமே தள்ளுபடி எனவும் கூறுவது, சமூக சமநிலைக்கு எதிரானது.

எனவே, 55.72 லட்சம் விவசாயப் பெருமக்கள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! கொடுத்த வாக்கை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும், மக்களுக்கு பலனளிக்கும் நேர்மையான நிர்வாகம் நடத்துவது எப்படி குறித்தும் நாங்கள் உங்களுக்கு சொல்லித் தருகிறோம்! அதை விட்டுவிட்டு உங்களை நம்பிய விவசாயப் பெருமக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும்.

முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின் காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது.

காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.

மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், “மாற்றம்” கொண்டு வருவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது.

எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். ” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share