மதிமுக சொந்த சின்னத்திலேயே நின்றிருக்கலாமோ?: விஜய்யை சந்தித்தபின் வைகோ பதில்!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்.

நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இன்று முதல்வர் விஜய் என வைகோ அடுத்தடுத்து சந்தித்து பேசுவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இன்று முதல்வர் விஜய்யுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் வைகோ.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் விஜய்யிடம் மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

தற்போது மகாராஷ்டிரா, குஜராத், கோவா என எந்த மாநிலமும் ஸ்டெர்லைட்டை உள்ளே விடவில்லை. அதன் உரிமையாளரான அனில் அகர்வால் மீண்டும் க்ரீன் காப்பர் என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் உள்ளே வர முயல்கிறார். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன், அதை அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகவும் ஸ்டெர்லைட்டுக்கு முழுமையாக ஆதரவு கொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களில் தீர்ப்பு வரும் சமயத்தில் தான் அதை மூடினர் என்றும் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நாளை ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கவுள்ளது. கடையநல்லூர், சீர்காழி தொகுதிகளில் வெற்றி பெற்ற உங்கள் எம்.எல்.ஏ.க்களின் நிலை என்னவாக இருக்கும்?

நாளைக்குதான் தெரியும்.

அரசியல் ரீதியாக உள்ளே என்ன பேசினீர்கள்?

இந்த அரசு அமைந்தது முதல் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மக்களின் மனதை குளிர்விக்கக்கூடிய, ஒரு ஆரோக்கியமான நிர்வாகமாகும். கமிஷன், கரப்பஷன் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது எனது கருத்து.

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்திப்பார்களா?

இப்படியெல்லாம் நீங்கள் தான் பேசுகிறீர்கள். இந்த ராத்திரி விவாதங்கள் இருக்கே… கச்சேரி அதிலெல்லாம் கடுமையாக பேசுகிறார்கள். அவர்களாக ஏதேதோ பேசுகிறார்கள். யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

2 பேரும் ராஜினாமா செய்யமாட்டார்களா?

யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சீர்காழியில் சொந்த சின்னம் என அறிவித்தீர்கள். பிறகு உதயசூரியன் சின்னத்தில் நின்றீர்கள். இப்போது சொந்த சின்னத்திலேயே நின்றிருக்கலாமோ என தோன்றுகிறதா?

மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியுமா…

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்வீர்களா… தவெகவுடன் செல்வீர்களா?

பொதுக்குழு கூடி, விவாதித்து முடிவெடுக்கப்படும்.

வெள்ளை அறிக்கை எப்படி இருக்கிறது?

வெள்ளை அறிக்கை வெள்ளையாக இருக்கிறது

நீங்கள் பல முதல்வர்களை பார்த்திருக்கிறீர்கள்… முதல்வர் விஜய்யின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

எளிமையாக, இயல்பாக, வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share