முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் ’டிஸ்மிஸ்’!

Published On:

| By Mathi

HC Dismisses Pleas Against CM Vijay, Udhayanidhi, and Tamilisai Over Election Affidavits

தமிழக முதல்வர் விஜய் (CM Vijay), எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi) மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரது தேர்தல் பிரமாணப் பத்திரங்களை முன்வைத்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 17) டிஸ்மிஸ் செய்தது.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், தமது பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை முரண்பாடாக குறிப்பிட்டுள்ளதாக விக்னேஷ் என்பவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ₹224 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களைக் காட்டிய விஜய், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ₹105 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களைக் காட்டியுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். ₹100 கோடிக்கும் அதிகமான இந்த வித்தியாசம், பிரமாணப் பத்திரங்களில் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன்னர், ”இக்குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் முறைகேடு” என வாய்மொழியாகக் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் விஜய், தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறையிடம் விளக்கம் கோரியிருந்தது உயர்நீதிமன்றம்.

ADVERTISEMENT

இதேபோல சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், “2021 மற்றும் 2026 தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் காட்டிய சொத்து விவரங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று குமாரவேலு என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வருமான வரித் துறை பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

அதேபோல மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், “ 2024 மக்களவைத் தேர்தலின் போது காட்டிய சொத்து விவரங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தை ஒப்பிடும்போது முரண்பாடுகள் இருப்பதாக” கவுதம் சிவா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை மற்றும் பிற அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் பெற்றிருந்தது.

இந்நிலையில் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share