இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான, ஆதிக்கவாதிகளுக்கான வசதிகளை மட்டுமே செய்து கொடுக்கிறது. ஆனால், என்னதான் அரசியல் பேசினாலும் அரசாங்கத்தின் பணம் மற்றும் உணர்வுகள் அனைத்தும் சாதாரண ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்கான சாத்தியத்தை, இந்தத் தேர்தல் மூலம் முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கி வைத்துள்ளது. இது தமிழகத்தின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியாகவே நான் கருதுகிறேன். இப்படி ஒரு வெற்றியை இந்தியாவில் எங்கும் பார்க்க இயலாது.
எனது அரசியல் வாழ்க்கையில் நான் மிகவும் வியந்து பார்த்த விஷயம் என்னவென்றால், இந்தத் தேர்தல் சாதி, மதத்தை ஒழித்துள்ளது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடுகளைப் போக்கி, இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை விஜய் உருவாக்கிக் காட்டியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஸ் மாநகரத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில், ‘இன்றைய காலத்தில் ஒரு ஏழையால் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ செல்ல முடியுமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், பணம் இல்லாதவனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை தற்போதைய தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இதனை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாகவே நான் கருதுகிறேன். அதனால்தான், கட்சிகள் மற்றும் வேறுபாடுகளை கடந்து எளிய மக்களுக்காக காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கையில் எடுத்ததைப் போன்ற ஒரு பெரிய இயக்கமாக இது வளர வேண்டும். அதற்கான விதை தற்போது போடப்பட்டு விட்டது.
எல்லோரும் ஒருங்கிணைந்து இதனைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன். பொதுவுடமை என்ற கொள்கை வேர்கள் மேலும் பலப்படும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படுவேன் என்ற உறுதிப்பாட்டை எடுத்துள்ளேன்” இவ்வாறு சி.மகேந்திரன் பேசினார்.
மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் காரணமாக கட்சி செயல்பாடுகளில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முகநூல் பதிவுகளிலும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சலசலப்பு- மூத்த தலைவர் சி.மகேந்திரன் அதிருப்தி! என்ற செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
