கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கிரி பிரசாத் வெற்றி பெற்றார்.
கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், ஸ்ரீநிதிக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தது.
இந்தசூழலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஸ்ரீநிதி விலகி தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஸ்ரீநிதி இன்று (ஜூன் 18) அக்கட்சியில் இணைந்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிதி, ”கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் ஒரு தொகுதியில் இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனாலும் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால் எங்களால் வேலை பார்க்க முடியவில்லை.
தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தான். இங்கு இருக்கக்கூடிய சில தலைவர்கள் குறிப்பாக பெண் தலைவர்களே கொங்கு மண்டலத்தில் வேறு யாரும் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு பெற்றதில் கூட ஒரு சிலர் சுயநலத்தால் அவசரமாக எடுத்த முடிவு என்றுதான் பார்க்க முடிகிறது.
2021ல் நான் காங்கிரஸ் கட்சியில் சேரும்போது ஆட்சியில் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி, பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் எதிராக செயல்படும் சித்தாந்தம் கொண்ட கட்சி என்பதால் தான் நான் அதில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டதால் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி இருந்தது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் தேர்தலை சந்தித்தேன். திராவிடம் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தேவை.
இன்றைக்கு எல்லோரும் ஒரு கவர்ச்சி அரசியலை நோக்கி ஒரு மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது திராவிட சித்தாந்தம் நமது தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம்,. அதுவும் பெண்கள் முதல் முறை அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக திராவிட சிந்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள்.
பெயருக்கு பெரியாரை வைத்துக்கொண்டு இருக்கிறவர்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று சொல்ல முடியாது. கொள்கை பிடிப்போடு பயணம் செய்ய வேண்டும். அப்படி என்றால் அது என்னைக்குமே திமுக தான். இன்றைக்கு இளைஞர்களுடைய தேவையே திராவிட சித்தாந்தம் தான்” என்று கூறினார்.
