தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 18) காலை 10 மணிக்குக் கூடியது. ஆளுநர்(பொறுப்பு) உரையுடன் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழில் உரையாற்றினார்.
ஆளுநர் உரை முழுமையாக…
”ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் திகழ்கின்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றத்தின் உறுப்பினர்களாகிய தாங்கள் அனைவரும் மக்களுக்கு தேவையானவற்றை விவாதித்து அதற்கு ஏற்ப சட்டங்களை இயற்றி மக்கள் நலனை காப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்
பல தடைக்கற்களை உடைத்தெறிந்து வெற்றி!
சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்ததே உண்மையான ஜனநாயகம் என்றார் அம்பேத்கர் . அத்தகைய ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் பகுத்தறிவு பகலவன் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை ராணி வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக கொண்டுள்ள சாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களால் தான் முடியும் என்று முடிவெடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான அரசினை ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அமர்த்தியுள்ளார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு மாற்றம் அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது .கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தன்னந்தனியாக பல தடைக்கற்களை உடைத்தெறிந்து பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை பிடித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டின் அரசியலில் 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, 1977 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோர் மாபெரும் புரட்சி ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 2026 ஆம் ஆண்டு மாபெரும் சரித்திர புரட்சியை தன்னந்தனியாக ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் .
மாநில உரிமை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்று திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், உரிய பிரதிநிதித்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை இயற்றும் அரசாக, திட்டங்களை தீட்டும் அரசாக, ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கான அரசாக இந்த அரசு விளங்கும் .
74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில்…
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக திகழும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவர்கள் வகுத்து தந்த கொள்கைகளை கட்டிக்காத்து பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவருடைய வழியில் ஜனநாயகத்தின் மேன்மையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நடைமுறைப்படுத்தும்.
கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாக திகழும் இந்த அரசு கடந்த 74 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை செய்து காட்டியுள்ளது .
தமிழ்நாட்டுக்கான உதவிகள் – பிரதமரிடம் மனு
தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் விஜய் புதுடெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகளான வான்வழி அமைப்பு மையத்தை சி.ஏ.பி.எஸ். (CAPS) ஓசூர் அருகில் நிறுவவும், மேகதாது அணைக்கட்ட கர்நாடக அரசு முயல்வதை தடுக்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை தடுத்து மீனவர்களையும் அவரது படகுகளையும் உடனே விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு தேவையான நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவுதல் மற்றும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்குதல் குறித்து கூறினார்.
நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார் . இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தமிழ்நாட்டுக்கான நிதி தீர்மானம்
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதி பகிர்வினை கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் இயற்றப்படும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல் உச்சநீதிமன்றம் வரை சென்று நிதி பகிர்வினை சட்ட ரீதியாக பெறுவதற்காக சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும் தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதி பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும் . தமிழ்நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும் மாநில உரிமைகளுக்காக போராடுவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான நலத்ததிட்டங்களை நிறைவேற்றுவதற்கும் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெரும் முனைப்புடன் இந்த அரசு செயல்படும் .
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிக மோசமான சீர்கேட்டை சந்தித்துள்ளது . முதலமைச்சர் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில் உறுதி அளித்தபடி கடந்த கால அரசின் தவறான நிதி நிர்வாகத்தின் மறைக்கப்பட்ட உண்மை நிலையை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டுள்ளது .
10 லட்சம் கோடி கடன்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கடனின் அளவு ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது . இது தற்போது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.33 சதவீதமாக உள்ளது . இதன் காரணமாக தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி நபர் மீதும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளது . 2024-25 நிதியாண்டில் 48,840 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 2025-26 ஆம் நிதியாண்டில் 78,324 கோடி ரூபாயாக ஒரே ஆண்டில் உயர்ந்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 2.2% ஆக உள்ளது . மொத்த வருவாய் வரவுகளில் கிட்டத்தட்ட 23% வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
வருவாய் இழப்புகள் மற்றும் வரிவசூல் துறைகளில் நிலவும் திட்டமிட்ட ஊழல் காரணமாக 2021-22 ஆம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5.93% ஆக இருந்த வரி வருவாய் 2025-26 ஆம் நிதியாண்டில் 5.45% ஆக குறைந்துள்ளது . அரசுக்கு நியாயமாக சேர வேண்டிய, திசைமாறி சென்ற வருவாயை முறையாக அரசின் கருவூலத்திற்கு கொண்டுவர இந்த அரசு ஏற்கனவே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது .
இதுவரை தடம்மாறி சென்ற வருவாயை அரசின் கணக்கிற்கு கொண்டுவரும் பொருட்டு மதுபான உற்பத்தியாளருக்கான கூடுதல் சிறப்பு கட்டணத்தை (Privilege Fee) இந்த அரசு அண்மையில் விதித்துள்ளது. இதன் மூலம் அரசின் கருவூல கணக்கில் வரவு வராத வருவாய்கள் அனைத்தும் முழுமையாக முறைப்படுத்தப்படும் அரசின் அதிகாரப்பூர்வ கருவூல வருவாயாக நேரடியாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசிற்கு ஓர் ஆண்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் வரவுகளில் ஏற்படும் அனைத்து இழப்புகளையும் அதேபோல் அரசு பணிகள் மற்றும் இதர அரசு செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் தடுத்து நிதிநிலையை மீண்டும் சீரான பாதைக்கு கொண்டுவர இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும் .
200 யூனிட் இலவச மின்சாரம்
மிகவும் சவாலான நிதி நெருக்கடியினை தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் வேளையிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்புடன் இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் முதல் மூன்று உத்தரவுகளாக நுகர்வோரின் மின் கட்டணத்தினை குறைத்திடும் விதமாக அரசிற்கு ஏற்படக்கூடிய 1,730 கோடி ரூபாய் செலவில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் தடுப்பு சிறப்பு படையினை உருவாக்கவும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினை ஏற்படுத்தவும் ஆணையிட்டுள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
பொது அமைதியை பேணி காப்பது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மகளிர் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான சூழ்நிலையில் உருவாக்குவது இந்த அரசின் முதன்மையான லட்சியமாகும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிக கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கைகளை எடுத்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும் . பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 2,545 புதிய பணியிடங்களுடன் 319 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன்களுடன் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பணியினை மிக சிறப்பாக செய்து முடிக்கும்.
போதை பொருள் ஒழிப்பு!
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள் கலாச்சாரம் வேரூன்றியது. இதனை கட்டுப்படுத்த முந்தைய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதன்மை காரணம் மாநிலத்தின் பரவலாக கிடைக்கும் போதை பொருள் பழக்கம் தான் . போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும். இதனை செயல்படுத்தும் விதமாக போதை பொருள் தடுப்பு சிறப்பு படை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது
மதுபான கடைகள் மூடல்
பொதுமக்களின் நலனில் பெருந்தன்மை கொண்ட இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த 717 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன கள்ளச்சாராய நடமாட்டம் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கும் இத்துறை முழுமையான கண்காணிப்பை ஏற்படுத்துவதற்கும் தேவையான கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும், இதன் மூலமாக ஆயத்தீர்வை வசூல் மற்றும் மதுபான விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்பட்டு மாநிலத்தின் சமூக பொருளாதார சூழல் நல்வழிப்படுத்தப்படும் .
திசைமாறி செல்லும் வருவாய்
தமிழ்நாட்டில் கனிம வளத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் முறைகேடுகள் காரணமாக கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை திறம்படவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நீடித்த காலத்திற்கு பயன்படுத்துவதையும் இந்த அரசு உறுதி செய்யும் . அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசைமாறி செல்வதை தடுத்து அது முறையாக வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக முறையான ஒழுங்கு முறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிம தொழிலும் வரிஏய்ப்பும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. இந்த முயற்சியின் வாயிலாக கனிமங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்குவதற்கு அரசு தீவிரமாக முயன்று வருகிறது .
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய பெருமக்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிப்பதற்கு வழிவகை ஏற்படுவதுடன் மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பிற்கும் உதவிகரமாக இருக்கும். இத்திட்டமானது மண்வளத்தை மேம்படுத்தி அதன் மூலம் வேளாண் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் தற்போதுவரை 18,274 ஏரிகள் மற்றும் குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன .
பயிர்க்கடன் தள்ளுபடி
வேளான் பெருமக்களுக்கு உதவும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், மற்ற விவசாயிகளுக்கு 35,000 ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் . இதன் மூலம் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர். இதனால் சுமார் 6,000 கோடி ரூபாய் அரசிற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
வேளாண் துறையை மறுமலர்ச்சி அடைய செய்வதும் வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே இந்த அரசின் முதன்மையான கொள்கையாகும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உடனடி நிதி உதவிகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மட்டுமின்றி முறையான நீர்ப்பாசன மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விளை பொருட்களுக்கு உரிய லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் நலன்களை காக்கும் முதன்மை சக்தியாக இந்த அரசு செயல்படும்.
ஊழலை ஒழிப்பதில் உறுதி
நிர்வாக அமைப்பில் மலிந்து கிடக்கும் ஊழலை வேரோடு அறுத்து நேர்மையான, வெளிப்படையான, தூய்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்கேற்ப அனைத்து துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிகள் எவ்வித ஒளிவு மறையும் இன்றி கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலவிய முறையற்ற நிதி பரிமாற்றங்களும் இடைத்தரகர்களின் தலையீடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
சாதி வாரி கணக்கெடுப்பு!
ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை. இந்த கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைவாக முடிக்க நாம் ஒன்றிய அரசினை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்.
இருமொழி கொள்கை
1968 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மும்மொழி கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலமாகிய இருமொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில் அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.
சென்னையில் உச்ச நீதிமன்றம் கிளை
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்தவும் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி
தேசிய கல்வி கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை கடைபிடித்தால்தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கப்பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசு நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. இது மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமமாகும். மும்மொழி கொள்கையை நிறைவேற்றினால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
மாநில பட்டியலில் கல்வி
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கல்வியானது பொதுப்பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை திணிப்பு, மும்மொழி கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.
காலி பணியிடங்களை விரைவாக நிரப்புதல்
உண்மையான கல்வி சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும் அதன் கற்பித்தல் திறனை உயர்த்துவதிலே அடங்கியுள்ளது . இதற்கேற்ப மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலி பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கு இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் . அதுமட்டுமின்றி உயர்கல்வித் துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களை இந்த அரசு கொண்டுவரும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு!
தமிழ்நாட்டின நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. டெல்டா மாவட்டங்களின் பிரதான நீர் ஆதாரமான காவிரி நீரினையே டெல்டா பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர். காவிரி நீரை பயன்படுத்துவது தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமை மிக பழமை வாய்ந்தது. நம்முடைய உரிமையை உச்சநீதிமன்றத்தில் நிலைநாட்டிய பின்பும் காவிரி நீரை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய நிலை இருக்கிறது . உரிய நீருக்கு பதிலாக உபரி நீர் தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது.. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் வேளாண் உற்பத்தியும் கடுமையாக பாதிப்படையும் . இதனை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாட்டிற்கு நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது .
மீனவர்களுக்கு தீர்வு
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை பாதிக்கும் பல்வேறு சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.. பருவமழை, புயல் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டு பாக் வளைகுடா பகுதியில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்கள் அடிக்கடி கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும் அவருடைய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட காலம் பிடித்து வைக்கப்படுவதும் கணிசமான அளவில் அபராதங்கள் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலைத்தன்மையையும் வெளிப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
மழை நீர் சேமிப்பு – தடுப்பணைகள்!
காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதிலும் தமிழ்நாட்டின் வனப்பரப்பு மற்றும் பசுமை பரப்பினை உயர்த்துவதிலும் சதுப்பு நில காடுகள், ஈர நிலங்கள், கடலோர பகுதிகள் என அனைத்து வகையான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளை பாதுகாப்பதிலும் இந்த அரசு உறுதியாக செயல்படும் . நிலத்தின் நீர்மட்டத்தை உயர்த்தவும் மழை காலங்களில் வரும் நீரை சேமிக்கவும் ஏதுவாக ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும். மேலும் கடலுக்கு சேர்கின்ற நீரை தடுக்கும் வகையிலும் மழை நீரினை சேமிக்கும் வகையிலும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு!
தென்மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்குவது முல்லை பெரியார் அணையாகும். முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஆணையிட்டதோடு, அணையை வலுப்படுத்திய பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது .ஆனால் அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் கேரள அரசானது அதற்கு மாறாக புதிய அணையை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும் முல்லை பெரியார் அணைப்பகுதியில் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.
நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கவும் அதனை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்கவும் இந்த அரசு தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும்.
உலகளாவிய சுற்றுலா தளம்
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சளுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய தளங்களில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளவும் கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இதர தளங்களுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்தை கிடைக்கவும் இத்தளங்களுக்கு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லவும் இந்த அரசு வழிவகை செய்யும். மேலும் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டு தளங்களில் மிக மெய்ம்மை மற்றும் மெய்நிகர் தோற்றம் (Augmented Reality & Virtual Reality) ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு தமிழர் நாகரிகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு அதன் அனுபவம் வழங்கப்படும். இவற்றுடன் இணைந்து மாநிலத்தின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணி காக்கும் வகையில் ஒரு விரிவான நிலையான சுற்றுலா கொள்கை (Sustainable Tourism Policy) வகுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்போடு உட்கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலா தளமாக இந்த அரசு மாற்றும்.
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
வரும் 2036 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற இலக்குடன் தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற கொள்கையில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் . இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க தேவையான அனுமதியினை ஒற்றைச்சாளர முறையில் விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இதன் மூலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி அடைவதோடு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
புதிய தொழில் கொள்கை
மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மையையும் தொழில் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்குடன் முந்தைய தொழில் கொள்கைகளின் தொடர்ச்சியை பேணுவதோடு தற்கால மற்றும் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு புதிய தொழில் கொள்கையை இந்த அரசு வகுத்து, உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும் .
அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒற்றைச்சாளர முறை (Single Window System) முழுமையான டிஜிட்டல் தளமாக மேம்படுத்தி எவ்வித நிர்வாக தாமதமும் இன்றி அனைத்து அனுமதிகளையும் விரைந்து வழங்கி தொழில் தொடங்குவதை எளிதாக்கும் ‘Ease of Doing Business’ சூழலை இந்த அரசு மேம்படுத்தும். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஒன்று தலைமை செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்படும். இந்த ஆணையத்தின் மூலம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமையில்லா தமிழ்நாடு
வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவது இந்த அரசின் முதன்மையான குறிக்கோள். வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்கள் சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்த அரசு ஏற்படுத்தி தரும்.
இந்தியாவில் நகரமயமாக்கலில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. வரும் 2031 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புற சிறப்பிற்கான இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியும் தங்களது குடிமக்களுக்கு உயர்தர வாழ்க்கை உறுதி செய்யும் வகையில் தூய்மையான குடிநீர் வினியோகம், நவீன நகர்ப்புற கட்டமைப்பு, பசுமையான மற்றும் தூய்மையான சூழல், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கும்.
அரசு துறையில் செயற்கை நுண்ணறிவிற்கு
அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குறித்த நேரத்தில் எவ்வித ஒளிவு மறையும் இன்றி தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு முறைப்படி காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசு பணி கனவு மெய்ப்படும்.
செயற்கை நுண்ணறிவிற்கு (AI) தனி கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் வரம்பை செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. அரசுத்துறைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் பொதுமக்களுக்கு சிறந்த மின்னாளுமை (E-Governance) சேவைகளை வழங்கவும் இத்துறை செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த துணை புரியும்.
69% இட ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு சமூக நீதியை காப்பதில் உறுதியுடன் இருந்து தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது . மேலும் சிறுபான்மையினரின் அரணாக திகழும் அரசு சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் என்றும் உறுதுணையாக இருக்கும்.. இந்த அரசு ஒரு உண்மையான மதச்சார்பற்ற சமூக நீதி அரசாக திகழும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உயர்தர பள்ளி கல்வி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்புகள், வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு என அனைத்து வகையிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக நீதியினை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு திகழும்.
மாற்றுத்திறனாளிகளின் நலனினை பேணி பாதுகாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது .மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழும். டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான அணுகல் வசதி ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமல்லாமல் சமூகத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
விளையாட்டு மேம்பாட்டு சேவை
எதிர்கால ஒலிம்பிக் வெற்றியாளர்களை உருவாக்குவதையும் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஆற்றல் மையமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஒலிம்பிக் உயர்திறன் மையங்கள் (Olympic Centers of Excellence) அமைக்க இந்த அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மையங்கள் உலக தரத்திலான பயிற்சி உட்கட்டமைப்பு, உயர்தர பயிற்சி, நவீன விளையாட்டு அறிவியல் வசதிகள், செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் முழுமையான விளையாட்டு மேம்பாட்டு சேவைகளை வழங்கும்.
திருநர் கண்ணியத்துடன் வாழ வழி செய்யும் விதமாக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் சுய உதவி குழுக்கள் அமைத்திடவும் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றிட துணை புரிந்தும் வீட்டு வசதி வசதிகளை உருவாக்கிடவும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.
அறநிலையத்துறையில் சீர்த்திருத்தம்
நமது வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொள்ளும். கோயில் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் அறக்கட்டளை வருவாய்கள் அனைத்தையும் முழுமையாக தணிக்கை (Audit) செய்வதற்கும் கணக்குகளை வெளிப்படையாகவும் கணினி மயமாகவும் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காலங்களில் நிலவி வந்த நிர்வாக முறைகேடுகள் முற்றிலும் களையப்பட்டு கோயில்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதி செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும்
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு ஊழியர்கள். இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவித்திடவும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வரசு செயல்படுத்தும். தமிழ் அடையாளம் மற்றும் பெருமை, கண்ணியமான வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பு, மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மீனவர் நலன், உலகத்தரம் வாய்ந்த கல்வி, வளமான தமிழ்நாடு, சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல், உலகத்தரமான கட்டமைப்பு மற்றும் மக்கள் நல அரசு, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என 10 தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சி பாதையாக இது இருக்கும்.
அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்
எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும். அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் படைபலம், பணபலம், அதிகார பலத்தை மீறி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இம்மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசின் கடமை இந்த கடமையை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் எல்லாம் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்இந்த மாமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொண்டு அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்பது எனக்கு ஐயமில்லை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப அனைவருக்குமான அரசாக, மக்களுக்கான அரசாக, விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக, வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி இந்த அரசு செயல்படும். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவோம். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்க பாடுபடுவோம். அரசின் இந்த முயற்சிக்கு சட்டமன்ற உறுப்பினராகிய அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்று கூறினார்.
