அரசு வழக்கறிஞர்கள் நியமன வழக்கு : முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் பெயரை நீக்க உத்தரவு!

Published On:

| By Kavi

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயரை நீக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில்,   ”தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.

தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் நியமனப்பட்டியல் என ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர்.

பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி முகமது ஷஃபிக் முன் இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ”விழுப்புரம் மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆகிய பணியிடங்களுக்கு முறையான காலமுறை நியமனங்கள்  செய்யும்போது, மனுதாரரின் விண்ணப்பங்களும் கண்டிப்பாகப் பரிசீலிக்கப்படும். 

மாநிலம் முழுவதும் உள்ள  அரசு வழக்கறிஞர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், முந்தைய அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைவதற்குள் முறையான நியமனங்களை அரசால் மேற்கொள்ள முடியவில்லை . இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதால், அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்குத் தற்காலிக நியமனங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். 

மனுதாரர் சார்பில்,  ”இது தற்காலிக நியமனங்கள் என்றாலும் மனுதாரரின் பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு அரசிடம் உரிய விளக்கம்  இல்லை.  அதே நேரத்தில், ஆடு திருட்டு வழக்கில் சிக்கிய மற்றொரு வழக்கறிஞரை அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது” என்று வாதிடப்பட்டது. 

இந்தநிலையில் தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி,  ”அரசு வழக்கறிஞர்கள் தேர்வு முறையில் முறைகேடுகள் அல்லது ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மனுதாரரிடம் இருந்தால், அவர் தாராளமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.  அதை விடுத்து, தற்போதைய வழக்கின் தகுதிக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

மேலும் இந்த வழக்கில் இருந்து முதல்வர் விஜய் , அமைச்ச்ர் ஆனந்த், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். மோகன்ராஜ் ஆகியோரது பெயர்களையும் நீக்க உத்தரவு  பிறப்பித்தார்.

“செய்திகளில் இடம்பிடிப்பதற்காக மட்டுமே”  இவர்களது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சட்டத்துறை செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி வழங்கினார்.  

அதுபோன்று, ”தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த மனுதாரரே இதனைத் ஒப்புக்கொண்டிருப்பது, இந்தத் தேர்வு முறை எவ்வளவு ‘நேர்மையாகவும், பாரபட்சமின்றியும்’ நடந்துள்ளது என்பதையே காட்டுகிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share