தேர்தல் வழக்குகள் முடிந்தவுடன் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினிமா செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 55 தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தசூழலில் டெல்லியில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த 6 மாத கால அவகாசம் உள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டுள்ளோம். இந்தவழக்குகள் முடிந்த பின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என பதிலளித்தார்.
