VIDEO: 21 நாள் தொடர் உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக் கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Mathi

Sonam Wangchuk Forcefully Hospitalized After 21-Day Hunger Strike

டெல்லியில் கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூகப் பொறியாளர் சோனம் வாங்சுக் கட்டாயமாக மருத்துவமனையில் இன்று ஜூலை 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்தைத் தொடங்கியது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூகப் பொறியாளர் சோனம் வாங்சுக், கடந்த 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார்.

ADVERTISEMENT

சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று அவர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சோனம் வாங்சுக் போராட்டம் நடத்திய டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ”சோனம் வாங்சுக் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். யர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் பணியின் போது, போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்த முயன்றதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், காவல்துறை மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்து சோனம் வாங்சுக், மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

யார் இந்த சோனம் வாங்சுக்?

சோனம் வாங்சுக், அறிவுசார் சமூகச் செயற்பாட்டாளர்களில் மிக முக்கியமானவர். லடாக்கின் உறைபனிப் பிரதேசத்தில் பிறந்த இவர், கல்வியாளர், சூழலியலாளர் மற்றும் பொறியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

லடாக்கின் கடினமான சூழலில் வளரும் மாணவர்களுக்காக SECMOL என்ற அமைப்பை உருவாக்கி, புத்தகப் படிப்பைத் தாண்டி, சுயசார்பு மற்றும் வாழ்வியல் சார்ந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.

ADVERTISEMENT

உலகையே வியக்க வைத்த ‘ஐஸ் ஸ்தூபி’ (Ice Stupa) என்ற அவரது கண்டுபிடிப்பு, பனிக்கட்டிகளைச் சேமித்து வைத்து, கோடைகால நீர் நெருக்கடியைத் தீர்க்கும் ஒரு உன்னதமான தொழில்நுட்பமாகும்.

லடாக்கின் நிலத்தையும், அதன் தனித்துவமான கலாச்சாரத்தையும் பாதுகாக்க இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்று அறவழியில் தொடர்ந்து போராடி வருபவர். நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அவர் எழுப்பும் கேள்விகள், இந்தியாவின் கல்விச் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான போராட்டங்களாக மாறியுள்ளன.

3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் பாத்திரமாக மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்தாலும், நிஜ வாழ்க்கையில் தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் களத்தில் நிற்கிறார் சோனம் வாங்சுக்.

வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share