– ரவிக்குமார்
அரசு சாரா நிறுவனங்கள் அயல் நாடுகளிலிருந்து நன்கொடைகள் பெறுவதை ஒழுங்கமைக்கும் எஃப்சிஆர்ஏ (FCRA Amendment Bill 2026) சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்றவுள்ளது.
முஸ்லிம்களின் பொதுச் சொத்துகளைக் கையகப்படுத்துவதற்கு வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது போல இது கிறித்தவர்கள் அதிகம் நடத்திவரும் அரசு சாரா நிறுவனங்களின் சொத்துகளைக் கையகப்படுத்திக் கொள்வதற்கான சட்டமாகும். பாஜக அரசு இதை 2026 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டம், அரசு சாரா அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கென சொல்லப்படுகிறது. இவ்வகை அமைப்புகள், தங்களுக்குச் சான்றிதழ் (FCRA Certificate) வழங்கப்பட்டிருந்தால்தான் வெளிநாட்டு நிதியைப் பெற முடியும். அந்தச் சான்றிதழ் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஒரு அமைப்பு சட்டத்தின் ஏதேனும் ஒரு விதியை மீறினாலோ அல்லது ஒன்றிய அரசுக்கு அதன் செயல்பாடுகள் பிடிக்கவில்லையென்றாலோ அதன் FCRA சான்றிதழை அரசு ரத்து செய்யலாம்.
2020 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் மூலம், அரசின் அனுமதி கிடைத்தால் ஒரு அமைப்பு தனது FCRA சான்றிதழைத் தானாகவே ஒப்படைக்கவும் (surrender) முடியும். ஒரு அமைப்பின் FCRA சான்றிதழ் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அது தன்னார்வமாக ஒப்படைக்கப்பட்டாலோ, வெளிநாட்டு நிதியும், அந்த நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட சொத்துகளும், சட்டத்தில் குறிப்பிடப்படும் அதிகாரியிடம் (Prescribed Authority) ஒப்படைக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு நிதியும், சொத்துக்களும்
இந்த மசோதா, FCRA சான்றிதழ் பின்வரும் சூழ்நிலைகளிலும் தானாகவே செல்லுபடியாகாது என்று கூறுகிறது:
(i) புதுப்பிப்புக்காக விண்ணப்பிக்கப்படாதிருந்தால்,
(ii) புதுப்பிப்பு மறுக்கப்பட்டால், அல்லது
(iii) காலாவதியாகும் முன் புதுப்பிப்பு பெறப்படாவிட்டால்.
எனவே, சான்றிதழ் ரத்து செய்யப்படுதல் அல்லது தன்னார்வமாக ஒப்படைக்கப்படுதல் மட்டுமல்லாமல், சான்றிதழ் புதுப்பிக்கப்படாத நிலையிலும், அந்த அமைப்பின் வெளிநாட்டு நிதியும் அதனால் உருவாக்கப்பட்ட சொத்துகளும் “நியமிக்கப்பட்ட அதிகாரி” (Designated Authority) வசம் ஒப்படைக்கப்படும். அந்த அதிகாரி, அமைப்பின் சொத்துகளையும் அதன் நடவடிக்கைகளையும் நிர்வகிப்பார்.
பின்னர் அந்த அமைப்பு புதிய சான்றிதழைப் பெற்றாலோ அல்லது பழைய சான்றிதழைப் புதுப்பித்தாலோ, பயன்படுத்தப்படாத சொத்துகள் அதற்கு மீண்டும் வழங்கப்படும்.
ஆனால், சட்டத்தில் குறிப்பிடப்படும் காலவரம்பிற்குள் அது அவ்வாறு செய்யத் தவறினால், வெளிநாட்டு நிதியும் அதனால் உருவாக்கப்பட்ட சொத்துகளும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட அதிகாரியிடமே இருக்கும்.
அந்த அதிகாரி, அத்தகைய சொத்துகளை ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள் அல்லது முகமைகளுக்கு மாற்றலாம். அவற்றை விற்பனை செய்தோ அல்லது பிற முறைகளில் மாற்றியோ கிடைக்கும் தொகை இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் (Consolidated Fund of India) வரவு வைக்கப்படும்.
FCRA சான்றிதழைப் பெற்றிருந்தாலும், பின்னர் அதைப் புதுப்பிக்காமல், உள்நாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தித் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வரும் அமைப்புகள் இருக்கலாம். இந்த மசோதாவின்படி, அத்தகைய அமைப்புகளின் வெளிநாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துகளும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவ அமைப்பு FCRA நிதியைப் பயன்படுத்தி ஒரு மருத்துவமனையை அமைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். கடந்த சில ஆண்டுகளாக அது உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தியே அந்த மருத்துவமனையை நடத்தி வருகிறது; FCRA சான்றிதழைப் புதுப்பிக்கவில்லை. இந்த மசோதா முன்வைக்கும் நிபந்தனையின்படி, அந்த மருத்துவமனை நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
பின்னர் அந்த அதிகாரி, அந்த மருத்துவமனையை சுகாதார அமைச்சகத்திற்கோ அல்லது மாநில சுகாதாரத் துறைக்கோ மாற்றலாம், அல்லது அதை விற்பனை செய்யலாம்.
ஒரு அரசு சாரா அமைப்பு வெளிநாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட தனது சொத்துகளை இழக்காமல் FCRA சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முடியாது. சான்றிதழைத் தன்னார்வமாக ஒப்படைத்தாலும், புதுப்பிக்காமல் விட்டாலும், அதன் விளைவு சொத்துகளை இழப்பதே.
கூடுதல் நிபந்தனைகள்

தற்போது ஒரு அமைப்பு வெளிநாட்டு நிதி பெறாமல் இருந்தாலும், தனது சொத்துகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், அது தனது FCRA சான்றிதழை காலவரையின்றி தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமின்றி FCRA விதிகள், சான்றிதழைத் தக்கவைத்துக்கொள்ள அமைப்புகள் பூர்த்தி செய்ய வேண்டிய கூடுதல் நிபந்தனைகளையும் விதிக்கின்றன.
ஆகவே, வெளிநாட்டு நிதியை நம்புவதை நிறுத்திவிட்ட அமைப்புகள்கூட, அந்தச் சட்டம் மற்றும் விதிகளின் கீழுள்ள அனைத்து கடமைகளையும் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இல்லையெனில், வெளிநாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட அவற்றின் சொத்துகள் அரசிடம் ஒப்படைக்கப்படும்.
2026 ஆம் ஆண்டின் FCRA திருத்த விதிகளின்படி, ஒரு அமைப்பு தனது சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டுமானால், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் குறைந்தது ரூ.10 லட்சம் வெளிநாட்டு நிதியை சமூக நலனுக்காக, தாம் தேர்ந்தெடுத்த துறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்;
அப்போதுதான் அது “நியாயமான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது” என்று கருதப்படும். இதன் பொருள், இரண்டு ஆண்டுகளில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வெளிநாட்டு நிதி கிடைத்தாலோ, அல்லது அந்த அளவிற்கு செலவழிக்க முடியாத நிலையிலோ, அதன் உரிமம் ரத்து செய்யப்படலாம்; அதன் விளைவாக அதன் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படலாம். அதாவது ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் குறைவான நிதியைப் பெற்ற அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
சந்தேகப் பட்டியல்

FCRA சான்றிதழைப் புதுப்பிக்க ஒன்றிய அரசு மறுக்கும் சூழ்நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வழிமுறையை இந்தத் திருத்தச் சட்டம் வழங்கவில்லை. இந்த சட்ட மசோதா, சான்றிதழ் புதுப்பிக்க மறுக்கப்பட்டால், அது தானாகவே செல்லுபடியாகாததாகக் கருதப்படும் என்று கூறுகிறது. சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால், அந்த அமைப்பு தனது சொத்துகளை இழக்கும்; அவை நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். ஆனால், அரசின் இந்த முடிவுக்கு எதிராக அந்த அமைப்பு மேல்முறையீடு செய்யக்கூடிய எந்த வழிமுறையையும் இந்த மசோதா வழங்கவில்லை.
புதிய விதிகளின்படி, தன்னார்வ அமைப்புகள் தங்களின் நோக்கங்கள், செயல்படும் ஊர்கள், சமூக ஊடகச் செயல்பாடுகள், முக்கிய நிர்வாகிகளின் வெளியீடுகள் போன்றவற்றை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். “அரசியல் நடவடிக்கை” என்று கருதப்படக்கூடிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. “அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்”, “குடிமக்களின் கடமைகள்” போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்கூட சந்தேகப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் இந்து மதம் சார்ந்த அமைப்புகளுக்குப் பொருந்துவதில்லை என்பது கவனத்துக்குரியது.
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், மாற்றுப் பாலினத்தவருக்கான சட்டப் பாதுகாப்பு போன்ற பல வரலாற்றுச் சாதனைகள் இத்தகைய அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பால் உருவானவைதான். சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் அவை ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் முன்னணியில் நின்றுள்ளன.

FCRA இணையதளத் தகவலின்படி, 2026 ஜூலை 15 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் FCRA சான்றிதழ் பெற்ற 14449 அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. 22,498 அமைப்புகளின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15,212 அமைப்புகளின் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது 37 710 அமைப்புகளின் சொத்துகளை ஒன்றிய அரசு கையகப்படுத்தப் போகிறது.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பாதிக்கப்படப் போவது அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமல்ல, அவற்றால் பயனடைந்துவந்த ஏழை எளிய மக்களும்தான். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு சொல்லும் செய்தி இதுதான்: “ஏழை மக்களுக்கு நாங்களும் உதவ மாட்டோம், மற்றவர்கள் உதவுவதையும் அனுமதிக்க மாட்டோம்”. இதற்குப் பெயர் ஜனநாயகமா?
(மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படப் போகும் சட்ட மசோதாக்கள் குறித்த தொடரின் 2 ஆவது கட்டுரை)

