பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசுக்கு (Modi Govt) எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உக்கிர போர்க்களமாகி நிற்கிறது. நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சியின் இந்த தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளன. நாடாளுமன்றம் கூடும் நிலையில் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் வீதிகள் பதற்றத்தில் தகிக்கின்றன.
பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் நாட்டில் நடைபெற்ற மிக முக்கியமான சில போராட்டங்களின் தொகுப்பு:

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2015)
2013-ஆம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், தொழில்துறை வளர்ச்சிக்காக நிலங்களை எடுக்கும்போது விவசாயிகளின் முன் அனுமதியோ (Consent) அல்லது சமூக தாக்க மதிப்பீடோ தேவையில்லை என மாற்றங்களைக் கொண்டு வர மோடி அரசு முயன்றது. இது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. நிலம் என்பது விவசாயிகளின் வாழ்வாதாரம், அது பறிக்கப்பட்டால் அவர்கள் வீதிகளுக்கு வருவார்கள் என்ற வலுவான கருத்து உருவானது. இதனை எதிர்த்து அன்னா ஹசாரே போன்றவர்கள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அரசின் இந்த நடவடிக்கையை “கார்ப்பரேட் ஆதரவு” என்று விமர்சித்தன. விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களும், பொதுமக்களின் ஆதரவும் அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அரசு தனது அவசர சட்ட முடிவை கைவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

ஜேஎன்யு (JNU) போராட்டங்கள் (2016)
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் குருவின் நினைவு தின (2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு 2013-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்) நிகழ்வில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறி மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஜே.என்.யூ. வளாகத்திற்குள் காவல்துறை நுழைந்தது. இது மாணவர்களின் கல்விச் சூழலிலும், கருத்து சுதந்திரத்திலும் அரசு தலையிடுவதாக மாணவர்கள் கருதினர். போராட்டங்கள் வெடித்தன, வளாகமே போர்க்களம் போல மாறியது. கருத்து சுதந்திரம், தேசபக்தி மற்றும் பல்கலைக்கழக சுயாட்சி குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் எழுந்தன. ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை மையமாக வைத்து விவாதித்தன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பணமதிப்பு நீக்க எதிர்ப்பு (2016)
நவம்பர் 8, 2016 அன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதே இதன் நோக்கம் என பிரதமர் மோடியின் மத்திய அரசு கூறியது. ஆனால், இது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிறு தொழில்கள், தினக்கூலிகள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாயினர். ஏடிஎம் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பணத்தட்டுப்பாட்டினால் பல உயிர்கள் பலியானதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் இதனை “அரசின் நிர்வாகத் தோல்வி” எனச் சாடின. நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு கூறியபடி 99% ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்ப வந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கம் நீண்ட காலம் நீடித்தது.

கங்கை நதி தூய்மைப் போராட்டம்
ஐ.ஐ.டி. கான்பூர் பேராசிரியராக இருந்து துறவியாக மாறிய ஜி.டி. அகர்வால், கங்கை நதியின் தூய்மைக்காகப் பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார். 2018-ஆம் ஆண்டு கங்கை நதியின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்யவும், நதியில் கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் வலியுறுத்தி இவர் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம், அவரது உயிரையே பறித்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் (2018)
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி மக்கள் போராடினர். நிலத்தடி நீர் நஞ்சானது, காற்று மாசுபட்டது, புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்தன. மக்கள் தொடர்ச்சியாக 99 நாட்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாளில் நடைபெற்ற பேரணியின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போராட்டம் வன்முறையாக மாறியதில் பலர் காயமடைந்தனர். இதன் விளைவாக ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. மக்களின் உரிமையைப் பாதுகாப்பதில் உயிரைத் தியாகம் செய்த இந்த போராட்டம் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்தது.

CAA மற்றும் NRC எதிர்ப்புப் போராட்டங்கள் (2019-2020)
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. இந்தச் சட்டம் மத ரீதியாக மக்களைப் பிரிப்பதாகக் கருதப்பட்டது. டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் தலைமையேற்று நடத்திய அமைதியான போராட்டம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. ஜாமியா மிலியா மற்றும் ஜேஎன்யு மாணவர்களும் இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர். டெல்லி கலவரத்தில் 53 பேர் பலியானார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கொள்கையைக் காக்க வேண்டுமென்பதே இப்போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாகப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தன.

உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் (2020-2021)
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் டெல்லியின் எல்லையில் முகாமிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய சந்தையைக் கைப்பற்றும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) உத்தரவாதம் இல்லையென்றும் அவர்கள் அஞ்சினர். ஓராண்டுக்கும் மேலாகத் தங்குதடையின்றிப் போராடினர். கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தவில்லை. 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்ததாக விவசாய சங்கங்கள் கூறின. அரசின் பிடிவாதம் தளரவில்லை, ஆனாலும் விவசாயிகளின் ஒற்றுமை வென்றது. இறுதியில் அரசு அச்சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.

அக்னிபத் திட்ட எதிர்ப்பு (2022)
ராணுவ ஆட்சேர்ப்பில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும், அதன் பிறகு பென்ஷன் கிடையாது. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று அவர்கள் கருதினர். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பீகார் மற்றும் பிற மாநிலங்களில் ரயில்கள் எரிக்கப்பட்டன. அரசுப் பணியில் நிரந்தரத் தன்மை இல்லையென்பதே இவர்களின் முக்கியக் கோபத்திற்கு காரணமாக இருந்தது. போராட்டம் வன்முறையானது.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் (2023)
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஜந்தர் மந்தரில் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் மீது புகார் கூறப்பட்டதால், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கியது. நாட்டின் பெருமைக்குரிய வீரர்கள் வீதியில் போராடியது உலகையே வேதனைப்படுத்தியது. இது விளையாட்டுத் துறையில் உள்ள அதிகார முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் (2016, 2019, 2020, 2026)
தனியார்மயமாக்கல், தொழிலாளர் சட்ட மாற்றங்கள் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தங்களை நடத்தின. 2026-ல் 30 கோடி பேர் பங்கேற்றதாகத் தெரிகிறது. வங்கி, போக்குவரத்து மற்றும் சுரங்கத் துறைகள் முடங்கின. தொழிலாளர்களின் உரிமைகளை அரசு காக்க வேண்டும் என்பதே இவர்களின் நீண்டகால கோரிக்கை. இது இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சியாகக் கருதப்படுகிறது.

லடாக் மாநில அந்தஸ்து கோரும் போராட்டம் (2024-2025)
சமூகப் பொறியாளர் சோனம் வாங்சுக் தலைமையில் லடாக் மக்கள் தனி மாநில அந்தஸ்து கோரி போராடினர். அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் தன்னாட்சி அதிகாரங்கள் கோரப்பட்டன. லடாக்கின் நிலம், கலாச்சாரம் மற்றும் சூழலியலைப் பாதுகாக்க இது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
உண்ணாவிரதப் போராட்டங்கள், பேரணிகள் மூலம் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். லடாக்கின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து காப்பதே இப்போராட்டத்தின் சாராம்சமாகும்.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள்
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் நீட் (NEET-UG) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் சமூகப் பொறியாளர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் கவனம் பெற்றுள்ளது. தற்போது காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
