லண்டனில் இருந்து சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட விமானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வராததால் அவரை வரவேற்க திரண்ட திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மு.க. ஸ்டாலின் பேரனும், சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி பட்டம் பெற்றார். பேரனை நேரில் வாழ்த்துவதற்காக ஸ்டாலின், மனைவி துர்காவுடன் 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டுச் சென்றார். பின்னர் உதயநிதியும் லண்டன் சென்றார். அங்கு பட்டமளிப்பு விழா முடிவடைந்து ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுத்தார்.
இதனையடுத்து லண்டன் பயணத்தை முடித்துவிட்டு இன்று ஜூலை 19-ந் தேதி காலை 7 மணி அளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று காலை முதலே சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பதாகைகளுடன் மு.க.ஸ்டாலினை வரவேற்க காத்திருந்தனர். திமுக மூத்த தலைவர்களான கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி, காந்தி, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் விமான நிலையத்துக்கு வருகை தந்தனர். மு.க.ஸ்டாலினின் காரும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி லண்டன் விமானத்தில் மு.க.ஸ்டாலின் வந்து சேரவில்லை. திமுக தலைவர்களும் தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், “இரவு 8 மணிக்கு மேல்தான் வருவாங்க.. ப்ளைட் மிஸ் பண்ணிட்டாங்க” என திமுகவினரிடம் தெரிவித்தார். இதனையடுத்து திமுகவினர் ஸ்டாலினை வரவேற்க கொண்டு வந்த பதாகைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றனர்.
மேலும், “விமானத்தை மிஸ் செய்திருந்தால் அதை உடனே சென்னைக்கு சொல்லி இருக்க வேண்டாமா? இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லையே?” என்றும் திமுகவினர் பேசிக் கொண்டனர்.
