தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்ததாக கூறப்படும் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது, தங்களுக்கு சாதகமாக வாக்களித்தால் 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாகக் கூறி சிலர் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே அரும்பாக்கம் திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இருவர் கைது:
கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் கொரட்டூர் கருணாநிதி, சாலிகிராமம் சரவணன், பள்ளிக்கரணை வினோத் வெங்கடேசன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கருணாநிதி, சரவணன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைது எண்ணிக்கை 14 ஆக உயர்வு:
இந்த வழக்கில் ஏற்கனவே சுமார் 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 2.80 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
