‘சர்ச்சை’ மசோதாக்கள்! நாளை கூடும் நாடாளுமன்றம்! இன்று அனைத்து கட்சி கூட்டம்!

Published On:

| By Mathi

Parliament

நாடாளுமன்ற (Parliament) மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஜூலை 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று ஜூலை 19-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி உள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இதில் தொகுதி மறுவரையறை மசோதா, முதல்வர்கள் பதவியை பறிக்கும் மசோதா உள்ளிட்டவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

நாடாளுமன்ற (Parliament) கூட்டத் தொடரில் தாக்கலாகும் மசோதாக்கள்

  • தேசியப் பாடலை அவமதிப்பதைத் தண்டிக்கும் திருத்த மசோதா, 2026: ‘வந்தே மாதரம்’ பாடும்போது வேண்டுமென்றே இடையூறு செய்பவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்காக, 1971-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, 2026: தாமதமாகப் பதிவு செய்வதற்கு இன்னும் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
  • வருமான வரித் திருத்த மசோதா, 2026: அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளிப்பதை முறைப்படுத்த இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா, 2026: தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா, 2026: எம்.எஸ்.எம்.இ (MSME) துறையை மறுசீரமைத்து வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Amendment Bill, 2026): கடந்த 2026 மார்ச் 25-ந் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்மசோதா, இந்தத் தொடரில் விவாதத்திற்கும் ஒப்புதலுக்கும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நிறுத்தி வைக்கப்படும் ‘சர்ச்சை’ மசோதாக்கள்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து, 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் அது நிறைவேறவில்லை.

தற்போது சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் இணைப்பால் பாஜக அணியின் பலம் அதிகரித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவின் ஆதரவும் தேவையானதாக இருக்கிறது. இந்நிலையில் திடீரென தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியிலிருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யும் ‘130-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா‘வும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரைத்த மாற்றங்களுடன் இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்படுமா என்பதும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கோரும்.

ADVERTISEMENT

அனைத்துக் கட்சி கூட்டம்.. அனல் பறக்கும்?

இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சோனம் வாங்சுக்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது, உடல்நலக் காரணங்களைக் கூறி காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரம் இந்தக் கூட்டத்தில் எதிரொலிக்கும்

நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து: ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) விவகாரத்தில் உயிரிழப்புகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்

தொகுதி மறுவரையறை மசோதா: தொகுதி மறுவரையறை மசோதாவில் அரசு கொண்டு வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய போதுமான அவகாசம் வேண்டும் என்றும், இது தொடர்பாக முன்கூட்டியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். இந்த பிரச்சனையும் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஸ்தான் மசோதா, 2025 (Viksit Bharat Shiksha Adhisthan Bill, 2025): உயர்கல்வித் துறையில் தற்போதுள்ள பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளை (Regulators) ஒருங்கிணைத்து, ஒரு குடைக்கீழ் கொண்டு வருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். இது உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், நிர்வாகத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தின் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (Joint Committee) ஆய்வில் உள்ளது.

இந்த மசோதா கல்வித்துறையின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்குமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எனவே, குழுவின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்

திமுகவின் வியூகம்

இந்தியா கூட்டணியில் திமுகவும் மிக முக்கியமான கட்சி அங்கம் வகித்தது. இந்தியா கூட்டணியின் அனைத்து போராட்டங்களிலும் திமுகவின் 22 எம்.பி.க்களும் இணைந்து பங்கேற்றனர். தற்போது திமுக- காங்கிரஸ் உறவு முறிவடைந்துள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸின் துரோகத்தை சுட்டிக்காட்டி திமுக புறக்கணித்தது. நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இணைந்து அமராமல் திமுக எம்.பி.க்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக எம்.பி.க்கள், “காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில்லை” என்பதில் உறுதியாக இருக்க கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க கோரி திமுக, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share