டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் (Congress), இடதுசாரிகளுடன் இணைந்து திமுக (DMK) வெளிநடப்பு செய்தது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஜூலை 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருந்தது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா
அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
-சிபிஐ(எம்) ஜான் பிரிட்டாஸ் - திமுக-வின் டிஆர் பாலு, திருச்சி சிவா
- அதிமுக தம்பிதுரை
- சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ்
- திரிணாமுல் காங்கிரஸின் சவுகதா ராய், மஹுவா மொய்த்ரா
- ஆர்எஸ்பி-யின் என்.கே. பிரேமச்சந்திரன்
- என்சிபி (எஸ்பி) தலைவர் சுப்ரியா சூலே
- காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ்
- ஜேடி(யு)-வின் சஞ்சய் ஜா
- சிவசேனா எம்.பி.க்கள் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிபுராவைச் சேர்ந்த NCPI என்ற கட்சியில் இணைந்துவிட்டதாக அறிவித்த 20 எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த 20 எம்.பி.க்களையும் அழைத்ததற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இந்த 20 எம்.பி.க்களை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நிமிடங்கள் அனைத்து கட்சிக் கூட்டத்தில் இருந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதுபற்றி மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுத்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது. அதேபோல NCPI-ல் 20 பேரும் இணைந்துவிட்டதாக கொடுத்த கடிதம் மீது சபாநாயகர் ஓம் பிர்லா எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படியான நிலையில் இன்றைய அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அந்த 20 எம்.பி.க்களும் எப்படி அழைக்கப்படலாம்? இதனைத்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இடதுசாரி கட்சிகள், தேசிய மாநாட்டு கட்சி, உத்தவ் தாக்கரே சிவசேனா அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. இது அடையாள போராட்டம்” என்றார்.
காங்கிரஸ் கட்சி எம்.பி. பிரமோத் திவாரி கூறுகையில், “20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை மத்திய அரசு அழைத்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது” என்றார்.
அதேநேரத்தில் சர்ச்சைக்குரிய NCPI-ல் இணைந்த எம்.பிக்கள் குழு தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார், ”பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்ததற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு நன்றி” என்றார்.
இன்றைய கூட்டம் குறித்து சிபிஐ(எம்) மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ”முக்கியமான, சர்ச்சைக்குரிய மசோதாக்களை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் அர்த்தமுள்ள விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். தொகுதி வரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல், எஃப்சிஆர்ஏ போன்ற மசோதாக்களை எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்திய பிறகு மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டோம். அயோத்தி பிரச்சினை மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்பின” என்றார்.
