மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? – எம்எல்ஏ காரை முற்றுகையிட்ட தவெக தொண்டர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் காரை, அக்கட்சியின் தொண்டர்களே முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ தங்கபாண்டியன், இன்று (ஜூலை 19) தனது தொகுதியில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமைத் தொடக்கி வைப்பதற்காக அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

திடீரென அங்கிருந்த தவெக தொண்டர்கள் சிலர், எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். மேலும், அவரை காரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கேட்டனர். நிலைமையை உணர்ந்த எம்.எல்.ஏ காரின் கண்ணாடியை இறக்கி, “உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனுவாகக் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறினார்.

அதற்கு அங்கிருந்த தொண்டர்கள் ஆவேசமாக, “மாற்றுக் கட்சிகளில் இருந்து இப்போது புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் கட்சியில் பெரிய பதவிகளைக் கொடுக்கிறீர்கள். ஆனால், உங்களை நம்பி, உங்களை ஜெயிக்க வைப்பதற்காக இரவு பகலாக வேலை பார்த்த எங்களைப் போன்ற பழைய தொண்டர்களுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லையே? இது எந்த விதத்தில் நியாயம்?” என்று எம்.எல்.ஏவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

ADVERTISEMENT

தொண்டர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த எம்.எல்.ஏ தங்கபாண்டியன், “இப்படிப் பொது இடத்தில் நின்று பதவி கேட்பதா?இதுதான் பதவி கேட்கும் இடமா? எதுவாக இருந்தாலும் மனுவாகக் கொடுங்கள்” என்று கறாராகக் கூறிவிட்டு, காரில் இருந்து இறங்காமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தவெக எம்.எல்.ஏவின் இந்த அதிரடி நடவடிக்கை, அங்கு திரண்டிருந்த சொந்தக் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share