நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி (Modi), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை (Rahul Gandhi) கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஜூலை 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒரே மாதத்தில், தேசம் பல மைல்கற்களை எட்டியுள்ளது, ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதமடையச் செய்யும் சாதனைகளின் வரிசை இது. தேசிய மேடையாக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்காக இருந்தாலும் சரி, அல்லது இப்போது விண்வெளியாக இருந்தாலும் சரி, இவை இந்தியாவுக்கு உண்மையிலேயே பெருமைக்குரிய தருணங்கள்.
கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கு சற்று முன்பு, ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். தற்போது.. சில நாட்களுக்கு முன்பு, ஒரு இளம் இந்திய ஸ்டார்ட்அப் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. உலகின் சில நாடுகள் மட்டுமே இத்தகைய தனியார் நிறுவனத்தைக் கண்டுள்ளன; இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சாதனை 28 வயது சராசரி கொண்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் குழுவினுடையது.. 56 வயது இளைஞருடையது அல்ல (ராகுல் காந்தி).
இது ஒரு மிகப்பெரிய வெற்றி… இது தற்செயலானது அல்ல; நமது நாட்டின் இளைஞர்களின் திறனும் இலக்குகளும் விண்வெளி போலவே எல்லையற்றவை.
உலகின் பல பகுதிகளில் நீடிக்கும் போரின் அச்சுறுத்தல் குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம், உலகம் முழுவதுமே கவலை கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல், எரிபொருளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் தொடர்பாக ஏராளமான தடைகளும் நெருக்கடிகளும் எழுந்துள்ளன. இருப்பினும், நாம் 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறோம்.
உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக நமது நாட்டின் பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. இது இந்தியாவின் உள்ளார்ந்த வலிமையை பிரதிபலிக்கிறது.
இந்த பின்னணியில்தான் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இந்தியாவின் இளைஞர்கள் பெரும் துணிச்சலைக் காட்டவும் வெற்றிபெறவும் முடிந்தது என்பது ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ (Reform Express) ரயிலில் நாடு பயணிப்பதன் விளைவுதான்.. சமீபத்தில், ராஜஸ்தானில் ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்புதான், மூன்றாவது செமி கண்டக்டர் தொழிற்சாலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பசுமை ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது; உலகில் மிக சில நாடுகளே இந்த வசதியைக் கொண்டுள்ளன. ஆயினும், இந்தியா அறிமுகப்படுத்திய ஹைட்ரஜன் ரயில் மிகவும் சக்திவாய்ந்த இஞ்சினைக் கொண்டுள்ளது இந்த சாதனை இந்தியாவின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்கு சாட்சியம்.
உண்மைகளும் தர்க்கமும் இருக்கும் இடத்தில், புயலுக்கு இடமில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.. நமது நாடாளுமன்றத்தின் அவைகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் கட்சி சார்பு எதுவாக இருந்தாலும், அவர்கள் பெரும் அனுபவம் கொண்டவர்கள். இது போன்ற நேரத்தில், நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் தேவைப்படுகின்றன. எனவே, நாடாளுமன்றத்தின் செயல்பாடு, அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும், ஒவ்வொரு கருத்தும் மதிக்கப்படட்டும். இந்த சபையின் நடவடிக்கைகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உற்சாகத்துடன் பங்கேற்க நான் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
