வைஃபை ஆன் செய்ததும், “உன் வழி ஊர்செல்லும்.. என் வழி நான் செல்வேன்..”வரிகளை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
வாங்க ப்ரோ.. யாரோட தனி வழியை பத்தி சொல்றீங்க?
அதிமுகவில நடக்கிறதை பத்திதான்.. ஒரு பக்கம் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்திகிட்டு இருக்காரு.. அப்பப்ப நீக்கம், நியமனங்களையும் அறிவிக்கிறாரு..
அப்படித்தான் போனவாரம் விழுப்புரம் மாவட்டத்துல சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரோட கட்சி பதவிகளை பறிச்சு அறிவிப்பு வெளியிட்டாரு இபிஎஸ்..
ஏற்கனவே சிவி சண்முகத்தின் விழுப்புரம் மா.செ. பதவியை பறிச்சு பசுபதியை நியமிச்சாரு இபிஎஸ்.. இதுல கடுப்பான சிவி சண்முகம் ஆதரவாளர்கள் பசுபதியோட மோதுனாங்க.. அதனால இப்ப சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கட்சி பதவிகளையும் இபிஎஸ் பறிக்க விழுப்புரம் அதிமுகவில் பிரளயமே வெடிச்சிருச்சு..

இன்னைக்கு சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவங்க ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து, இபிஎஸ்-க்கு எதிராக புலம்பி நாங்க அதிமுகவை விட்டே விலகுகிறோம்னு ‘நூதன’ முறையில கூண்டோடு ராஜினாமா செஞ்சிருக்காங்க..
இதை பத்தி சிவி சண்முகம் தரப்பில விசாரிச்சப்ப, “ஆமாங்க சார்.. இந்த பிரச்சனையை சிவி சண்முகம் அண்ணன்தான் டீல் செய்யுறாரு.. முதல்ல 500க்கும் மேற்படவங்க பஸ், டிராவல்ஸ்னு கிளம்பி சென்னையில அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போய் இபிஎஸ்கிட்ட கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுக்கிறதுன்னுதான் முடிவு எடுத்தாங்க.. அதுக்காக ஒவ்வொருத்தருடைய முகவரி, கட்சிப் பதவி, அவங்க கையெழுத்துன்னு பார்ம் ரெடி பண்ணினாங்க..

இதனால சென்னையில அதிமுக ஆபீஸ்ல வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பும் அதிகரிச்சுட்டாங்க.. அதுக்கு பிறகு ஆலோசனை நடத்திதான் அம்மா நினைவிடத்துக்கு (ஜெயலலிதா) போவோம்.. அங்க போய் அதிமுகவில இருந்து விலகுறதா அறிவிப்போம்னு முடிவெடுத்து செஞ்சிருக்காங்க..

சிவி சண்முகம் இப்படி அதிரடியாக முடிவெடுக்கிறதை தெரிஞ்சுகிட்டு எஸ்பி வேலுமணி பேசினார்.. அப்ப, “நாம ஒரு வருஷம் அமைதியா இருப்போம்.. அதுக்கு அப்புறமா எல்லாத்தையும் பார்த்துக்கலாமே”ன்னு தள்ளி போட சொன்னார் எஸ்பி வேலுமணி.
ஆனா சிவி சண்முகமோ, “நீங்க டெல்லி என்ன சொல்லுதோ அதை கேட்டுகிட்டு இருக்கிறீங்க.. நீங்க எல்லாம் அப்படியே இருங்க.. ஏற்கனவே ஓபிஎஸ் இப்படித்தான் அமித்ஷா பேச்சை கேட்டு அமைதி காத்துகிட்டே இருந்தாரு.. ஆனா டெல்லி கைவிட்டுச்சு.. கடைசியில அவரு திமுகவுக்கு போய்ட்டாரு.. அதே மாதிரி நிர்மலா சீதாராமன் பேச்சை கேட்டு செங்கோட்டையன் ஆவர்த்தனம் பண்ணினாரு.. அவரையும் கைவிட்டாங்க.. அவரு விஜய்கிட்ட போயிட்டாரு.. தங்கமணி பியூஸ் கோயல் பேச்சை கேட்டுகிட்டு இருக்கிறாரு..
என்னால எல்லாம் உங்களை மாதிரி டெல்லி பேச்சைகிட்டு அமைதியாக இருக்க முடியாது… என் வழி எப்பவுமே தனிவழி.. நான் என்ன செய்யனுமோ செஞ்சுக்கிறேன்”ன்னு கட் அண்ட் ரைட்டா பேசிட்டாரு”ன்னு சொல்றாங்க ப்ரோ..
அப்ப, சிவி சண்முகம் கோஷ்டியும் கூண்டோடு தவெகவுக்கு போக போறாங்களா?
அப்படித்தான் எல்லாரும் நினைக்கிறோம்.. ஆனா சிவி சண்முகம் கோஷ்டியில இருக்கிறவங்ககிட்ட பேசுனா, “அதிமுகவைவிட்டு இந்நாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்னு பலரும் தவெகவுக்கு தினமும் போய்கிட்டுதான் இருக்காங்க.. ஆனால், அவங்க யாருக்குமே விஜய் பதவி, பொறுப்பு எதுவுமே தரலையே… இவங்கதான் வலிய போய் ஒட்டிகிட்டு இருக்காங்க.. அதனால விஜய்யை நம்பி எப்படி அந்த கட்சிக்கு போறது? சிவிஎஸ் (சிவி சண்முகம்) நல்ல முடிவா சொல்வாரு”ன்னு ”வேற ரூட்டை பத்தி பொடி வெச்சு” சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
