சென்னை மேயர் பிரியா vs தவெக எம்.எல்.ஏ பல்லவி : வெடித்த ‘ப்ரோட்டோகால்’ மோதல்!

Published On:

| By Kavi

அரசு விழாவில் கலந்து கொண்ட மேயர் பிரியாவுக்கும் எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே குத்துவிளக்கு ஏற்றும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உருது பள்ளி ஒன்றில் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் சென்னை மேயர் பிரியா. ஆர்.கே.நகர் தவெக எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது முதலில் மேயர் பிரியா குத்துவிளக்கு ஏற்றினார். அடுத்ததாக விளக்கு ஏற்றுவதற்காக, பிரியா கையில் இருந்த மெழுவர்த்தியை வாங்குவதற்கு எம்.எல்.ஏ பல்லவி முயன்றார்.

ஆனால், அவரிடம் பிரியா மெழுகுவர்த்தியை தரவில்லை. அவருக்கு அருகில் நின்றிருந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் வழங்கினார்.  இதனால் நிகழ்ச்சியில் இருந்த எம்.எல்.ஏ பல்லவி கோபித்து கொண்டு நிகழ்ச்சியை விட்டு புறப்பட்டார்.

ADVERTISEMENT

அடுத்ததாக திரு.வி.க நகர் தொடக்க பள்ளி புதிய கட்டிடத்தை மேயர் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின் போது, தான் விளக்கு ஏற்றியதை தொடர்ந்து அருகில் நின்றிருந்த எம்.எல்.ஏ பல்லவியிடம் மேயர் பிரியா மெழுவர்த்தியை கொடுத்தார்.

ஆனால் அதை எம்.எல்.ஏ பல்லவி வாங்கவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்டவர்கள் அறிவுறுத்திய போதும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நகர்ந்து சென்றுவிட்டார் பல்லவி.

ADVERTISEMENT

அரசு விழாவில் மேயர் பிரியாவுக்கும், எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை பேசுபொருளாகியுள்ளது.

 இந்தநிலையில் செய்தியாளர்கள் மேயர் பிரியாவிடம், சட்டமன்ற உறுப்பினர் பல்லவி புறக்கணிக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பிரியா, ”அவர் புறக்கணிக்கப்படவில்லை. இதோ எங்களுடன் தான் பங்கேற்றார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரை துறை ரீதியாக அழைத்தோம். ப்ரோட்டோகால் படி ஐஏஎஸ் அதிகாரிக்கு பின்னர்தான் சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்றவேண்டும். அது அவருக்குத் தெரியவில்லை.

இப்போது அமைச்சர் இருந்தார் அவருக்கு பின்னர்தான் நான் ப்ரோட்டோகாலை பின்பற்றமுடியும். அப்படியிருக்கும் போது ஒரு ஐஏஎஸ் இருக்கிறார் என்றால் அவருக்கு பின்னர்தான் சட்டமன்ற உறுப்பினர் அதை செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என கூறினார்.

இதுபற்றி எம்.எல்.ஏ பல்லவி புளியந்தோப்பில்செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதலில் அவர் விளக்கேற்றிய பிறகு என்னிடம் மெழுவர்த்தியை கொடுக்க சொல்லி அறிவித்தார்கள். ஆனால் அவர் என்னிடம் கொடுக்காமல் அருகில் நின்றிருந்தவரிடம் கொடுத்தார்.

இதையடுத்து பள்ளி தரப்பிலிருந்து அவர் (பிரியா) இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை என்று சொன்னார்கள்.

ரிப்பன் வெட்டுவதும், கேண்டில் ஏற்றுவதும் பெருமை இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம்” என்றார்.

அப்போது அவரிடம் இரண்டாவது இடத்தில் விளக்கேற்ற உங்களிடம் மெழுவர்த்தி கொடுத்தாரே என்ற கேள்விக்கு… ”அவர் கொடுக்க வேண்டும் என்று கொடுக்கவில்லை. சரி, சரி இந்தாங்க இங்கேயாவது ஏற்றுங்க என போனா போகிறது என்ற வகையில் கொடுத்தார். அதை எப்படி வாங்குவது.

இதில் நான் ஈகோ எதுவும் பார்க்கவில்லை. இங்கேயாவது ஏற்றுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம். நான் தாமதமாகவும் வரவில்லை. அவரது காருக்கு பின்னால் தான் நாங்கள் போனோம்.

குத்துவிளக்கை ஏற்றுவதை பொறுத்தவரை மேயருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்தான் ஏற்றவேண்டும். அதுதான் ப்ரோட்டோகால். ஆனால் மேயர் பிரியா படித்த ப்ரோட்டோகால் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னும் அவர்களுடைய ஆதிக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை வேலை செய்ய விடுவதில்லை. கவுன்சிலரிடம் மக்கள் ஒரு பிரச்சினையை எடுத்துச் சென்றால், அவர்களுக்குத்தானே ஓட்டுப்போட்டீர்கள் என்று சில்லித்தனமாக சொல்கிறார்கள். அவர்களை போய் கேளுங்கள் என்கிறார்கள்.

இருக்கிறவர்களை தற்குறி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் தான் தற்குறி வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதல் இடத்தில் மேயருக்கு பிறகு ஐஏஎஸ் தான் விளக்கேற்ற வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். இரண்டாவது இடத்தில் அவர் ஏற்றியதும் என்னிடம் மெழுகுவர்த்தி கொடுக்கிறார். இடையில் அவர் காரில் வரும் போது யாரேனும் போன் செய்து, இதுதான் ப்ரோட்டோகால் என்று சொல்லியிருப்பார்கள்.” என கடுமையாக விமர்சித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share