பாஜகவில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ள அண்ணாமலை, நாளை மனம் திறந்து பேசுகிறேன் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடந்த 1ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரிடம், புதிய கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அண்ணாமலை பதிலளிக்கவில்லை. ’இரண்டு நாளில் பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றவர் கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
கடந்த 2ஆம் தேதி தேசிய பொதுச்செயலாளர் நிதின் நபினை சந்தித்து கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தும், தமிழக பாஜக நிலவரம் பற்றியும் குறிப்பிட்டு 5 பக்க கடிதத்தை வழங்கினார்.
இந்தநிலையில் அன்றைய தினமே சென்னை திரும்பவிருந்த அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளார். பின்னர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் அண்ணாமலை.
இந்தசூழலில் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. இன்று அவரது பிறந்தநாள்… தமிழ்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட காத்திருந்த நிலையில் அவர் சென்னை திரும்பவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க காத்திருப்பதாகவும், ஆனால் பிரதமர் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் சந்திக்க முடியவில்லை எனவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
அதில், ”நாளை நண்பகல் 12 மணிக்கு, எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களுடன் மனந்திறந்து பேசவும் சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் உரையாட ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
