திடீரென முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்ற துரை வைகோ : ஏன்?

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதிமுக எம்.பி.துரை வைகோ கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை என்று துரை வைகோ அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (ஜூன் 4) மாலை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் துரை வைகோ.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது பட்டியலிட்ட கோரிக்கைகளை துரை வைகோ தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,

ADVERTISEMENT

1. திருச்சியை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியான தமிழ்நாடு அரசு (TNSTC) போக்குவரத்துக் கழகம் அமைத்து தர வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன்.

2. திருச்சி, தமிழ்நாட்டின் புவியியல் மையமாக அமைந்துள்ளதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுடனும் சிறந்த சாலை, இரயில் மற்றும் விமான இணைப்புகளைக் கொண்ட மாநகரமாக திகழ்கிறது. இதனால், அரசியல் மற்றும் சட்டமன்ற நிர்வாக மையமாக செயல்படுவதற்கு மிகவும் ஏற்ற மாநகரமாக இருக்கும் என்பதை எடுத்துரைத்து, ⁠தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முக்கியமான பரிந்துரையாக, திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.

3. 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (சமயபுரம்–தில்லைநகர்–வயலூர், துவாக்குடி–பஞ்சப்பூர், ஜங்ஷன்–விமான நிலையம்–மாத்தூர்) திருச்சி மாநகரத்திற்கு மெட்ரோ இரயில் திட்டத்தை ஆய்வு செய்து விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை திருச்சியில் அமைப்பதை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டேன். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே பல முன்னணி கல்வி நிறுவனங்கள், NIT, IIM, BIM, IIIT, TNNLU மற்றும் Bharathidasan University ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்கலைக்கழக நகரம் அமைக்கப்படுவதன் மூலம் உயர்கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாடு வலுப்பெறுவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

5. ⁠திருச்சி – மணப்பாறை தொழிற்சாலை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்கிட வேண்டும். அதற்கு. ஒன்றிய அரசின் 2026 பட்ஜெட்டில் ரூபாய் 40,000 கோடி ஒதுக்கீட்டுடன் “இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி – மணப்பாறை சிப் காடை செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையின் முக்கிய மையமாகத் தேர்வு செய்து மேம்படுத்திடலாம் என்று ஆலோசனை வழங்கி கோரிக்கை வைத்தேன்.

சரியான கொள்கை ஆதரவு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டால், இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, திருச்சியை தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய மையமாக மாற்றும் என்று எடுத்துரைத்தேன்.

6. ⁠திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய உலர் துறைமுகம் (Dry Port) அமைக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டேன். இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடி ஒப்புதலை பெற்றுள்ளேன் என்பதையும் முதல்வரிடம் விளக்கமாக தெரிவித்தேன்.

7. ⁠திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது 95% நிறைவடைந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் இத்திட்டத்தை முன்னெடுக்க கடந்த 20 மாதங்களாக நான் தொடர் முயற்சி மேற்கொண்டு வருவதை எடுத்துரைத்தேன். ஓடுபாதை விரிவாக்கத்திற்குத் தேவையான மீதமுள்ள 7.67 ஏக்கர் நிலம், வழிகாட்டி மதிப்பு (GLV) திருத்தம் நிலுவையில் இருப்பதால் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. எனவே, வழிகாட்டி மதிப்பு திருத்த அறிக்கைக்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் வழங்கினால், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்து, சுமார் ₹350 கோடி மதிப்பிலான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் விரைவாக தொடங்க முடியும். இதற்காக முதலமைச்சரின் உடனடி தலையீடும் ஒப்புதலும் கோரப்பட்டுள்ளது.விமான நிலைய ஓடுதளத்தை (Runway) விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினேன்.

8. ⁠ ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பழமையான கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், விரிவாக்கத்திற்குத் தேவையான நிலப்பரப்பும் இல்லாத நிலையில் உள்ளது. மருத்துவமனை வளாகம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பேருந்து நிலையம் எதிரே இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகி, நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்படுகின்றதை சுட்டிக்காட்டி 2025ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டபோது, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகிலுள்ள பஞ்சக்கரை பகுதியில் அரசு நிலம் இருப்பதும், அங்கு மருத்துவமனையை மாற்றி அமைப்பது சாத்தியமானதும் தெரியவந்தது. எனவே, பொதுமக்கள் நலன், நோயாளிகளின் வசதி, எதிர்கால விரிவாக்கத் தேவைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை பஞ்சக்கரை பகுதியில் உள்ள அரசுச் சொந்த நிலத்திற்கு மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

9. ⁠புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் தாய்-சேய் நலக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை அகற்றி அதே இடத்தில் புதிய MCH கட்டிடம் அமைப்பது அவசியமாகியுள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், இத்திட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக தாய் மற்றும் குழந்தைகள் நலச் சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். எனவே, மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து, தேவையான நிதியை விரைந்து ஒதுக்கி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

10. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தற்போது எட்டயபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தொலைவு காரணமாக அடிக்கடி மின்தடை மற்றும் பராமரிப்பு சிரமங்கள் ஏற்படுகின்றன. விவசாயத்தை சார்ந்த பின்தங்கிய இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, கடலையூரில் 33/11 கே.வி. துணை மின் நிலையம் அமைப்பதற்காக சமூக ஆர்வலர் திரு அ. மாரியப்பசாமி அவர்கள் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளதுடன், அதற்கான ஒப்புதலையும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே வழங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடலையூரில் 33/11 கே.வி. துணை மின் நிலையத்தை விரைவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.

11. ⁠விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பருத்தி அரவையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, பருத்தி விதைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் (CESS) கட்டணத்தை ரத்து செய்து அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனுவை வழங்கினேன்.

12. ⁠மேலும், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாப்பு, விவசாய நிலங்களின் வளம் மற்றும் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இதற்காக தலைவர் வைகோ வழக்குத் தொடர்ந்து, வாதாடி பெற்றுத்தந்த தீர்ப்பை சுட்டிக்காடினேன்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வளர்ச்சி, விவசாயிகளின் நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் அனைத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மக்களின் குரலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவதும் எனது கடமையாகும். அந்தப் பொறுப்புணர்வோடு முதல்வரை சந்தித்தேன். மிக நல்ல சந்திப்பாக அமைந்தது.
எனது திருச்சி தொகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் தொடர்ந்து செயலாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share