கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர்ஜோசப் விஜய் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கனிம வள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறையானது. கனிமவள ஆய்வினை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிப்பதற்காக. குத்தகைப் பகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்து குத்தகைக்கு விடப்பட்ட பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன் கனிம வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் முறையாக எடுத்துப் பயன்படுத்துவதற்கும், கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும். சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனிமவளத் துறை அமைச்சர் பிரபு தென்மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு செய்து விதிமீறல்களில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
