தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி (Praveen Chakravarty) போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சி.வி. சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இதனையடுத்து தமது ராஜ்யசபா எம்.பி. பதவியை சிவி சண்முகம் கடந்த மே 7-ந் தேதி ராஜினாமா செய்தார்.
சிவி சண்முகம் ராஜினாமா செய்த 1 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் ஒரு எம்.பி.யை எளிதாக தேர்வு செய்ய முடியும்; ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அந்த 1 எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரான முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தமிழக ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த அறிவிப்பை இன்று ஜூன் 4-ந் தேதி வெளியிட்டுள்ளார்.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
தேர்தல்களின் போது வாக்காளர்களின் மனநிலை, வாக்குப்பதிவு தரவுகள், சமூக-பொருளாதாரக் காரணிகளைத் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பணியை மேற்கொள்கிறது பிரவீன் சக்கரவர்த்தி தலைமையிலான காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு பிரிவு.
மயிலாடுதுறை வேட்பாளர் கனவு
தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பிரவீன் சக்கரவர்த்தி. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மயிலாடுதுறையில் போட்டியிட விரும்பி அதற்கான பணிகளை செய்தார் பிரவீன் சக்கரவர்த்தி. ஆனால் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் 2024-ல் கடைசி நேரத்தில்தான் மயிலாடுதுறையின் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டார்.
தவெக- காங்கிரஸ் ‘உறவுப் பாலம்’
தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தவெக தலைவரான விஜய்யை அப்போது சந்தித்து பேசியவர் பிரவீன் சக்கரவர்த்தி. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வந்தவர்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மே 5-ந் தேதி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் முடிவை காங்கிரஸ் மேற்கொண்டது. அப்போது காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் விஜய்யை நேரில் சந்தித்தவர்களில் பிரவீன் சக்கரவர்த்தியும் ஒருவர்.
காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு இணைப்பு பாலமாக இருந்தவர் பிரவீன் சக்கரவர்த்தி. மே 10-ந் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றிய மேடையில் பிரவீன் சக்கரவர்த்தி பெயரை நெகிழ்ச்சியுடன் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
நிறைவேறிய விஜய் (VIJAY) விருப்பம்
இதனால் பிரவீன் சக்கரவர்த்திக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க விரும்பினார் விஜய். பிரவீன் சக்கரவர்த்திக்காகவே, தவெகவுக்கு எளிதாக கிடைத்த ராஜ்யச்பா எம்.பி. பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தார் முதல்வர் விஜய். தற்போது விஜய் விரும்பியபடியே பிரவீன் சக்கரவர்த்தையை காங்கிரஸ் மேலிடமும் வேட்பாளராக அறிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி.யாகும் பிரவீன் சக்கரவர்த்தியின் பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி முடிவடையும்.
