நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு இயக்கம் இன்று ஜூலை 23-ந் தேதி போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இயக்குநர் அமீர் பேசியதாவது: ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம்.
நீட் தேர்வுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். அனிதாவின் மரணத்தில் தொடங்கின அந்த ஓலம் இன்றைக்கு வரைக்கும் நிற்கவே இல்லை.
நீட் தேர்வை ஒழிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது ஒரு ஏமாற்று வேலை. எந்தக் கட்சியும் அல்லது அரசும் இதை முழுமையாக மாற்ற முன்வராது என்று நம்புகிறேன்.
நீட் ஒழிக்க ரகசியம் இருக்கிறது என்கிறவர்களும் அனிதாவின் வீட்டுக்கு போனவர்களும் அதிகாரத்தில் இருந்தாலும் எதுவும் செய்யமாட்டார்கள்.
அரசியல் கட்சிகளிடம் கோடிக்கணக்கான தொண்டர்களும் வாக்குகளும் இருப்பதாகக் கூறினாலும், அரசியல் என்பது பிழைப்பு வாதமாகவே மாறிவிட்டது. கட்சிகளை நம்பிப் பயனில்லை.
மதத்தையும், சாதியையும், கவர்ச்சியையும் காட்டி மக்களை மூளைச்சலவை செய்துவிட்டனர்.
மாணவர்களை ஏன் அடிக்க வேண்டும்? அவர்கள் என்ன தீவிரவாதிகளா? கலவரக்காரர்களா? எதற்காக அடிக்க வேண்டும்?
ஒருகட்டத்தில் ராகுல் காந்தி மீது நம்பிக்கை எல்லாம் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் நம்பிக்கையை இழக்க செய்துவிட்டன.
நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது அராஜகம் செய்கின்ற அநீதி செய்கின்ற அரசுக்கு என்றைக்குமே எதிரானவன். இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.
இயக்குநர் அமீர் பேச்சு:
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறன் பேசியதாவது: ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், மற்ற அமைப்புகள் சரியாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். மாணவர்களின் இந்த போராட்டம் என்பது ஒட்டுமொத்த அரசினுடைய தோல்வியைக் குறிக்கிறது.
இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், நீட் முறையை முழுமையாக நீக்குவதற்கானதாக இருக்க வேண்டும்.
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியும், மருத்துவ அறிவும் மாணவர்களிடமிருந்து முழுமையாகப் பறிக்கப்பட்டு, மீண்டும் மக்களை கைகட்டி நிற்க வைக்கும் நிலைக்குத் தள்ளும் முயற்சி நடக்கிறது.
நீட் தேர்வினால் தகுதியான மாணவர்களும், நடுத்தரக் குடும்பத்து பிள்ளைகளும் மருத்துவராக முடியாமல் தவிக்கின்றனர். நீட் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு மாணவர்கள் தங்களது எதிர்காலத்திற்காகப் போராடி வருகின்றனர்.
இன்றைய தலைமுறையினருடன் நானும் நிற்கிறேன். மாணவர்களின் போராட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தொடர்ந்து துணை நிற்பேன்.
