தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடுவதற்கான பெரிய இடத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்து மாணவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் பண்பாட்டு இயக்கம் இன்று ஜூலை 23-ந் தேதி நடத்திய போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: எஸ்.எஃப். ஐ. இயக்கத்தில் இருக்கிற மாணவர் தோழர்கள் நிறைய பேர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது, உண்மையில் அந்த வீடியோக்களை இங்கே இருக்கிற முதல்வர் விஜய் பார்க்கவில்லையா? ஏன் அவர் இந்த வீடியோக்களைப் பார்க்கவில்லை? ஏன் போலீசாரை வைத்து மாணவர்களை ஒடுக்க வேண்டும்?
முதல்வர் விஜய், நீங்க நீட் எதிர்ப்பாளர் தானே? நீட்டை நீங்க எதிர்க்கிறீர்களே.. நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில உள்ளவர் நீங்கள்.. அப்படியானால் போராடுவதற்காக ஒரு பெரிய இடத்தை ஒதுக்கி கொடுக்கலாமே.. அந்த இடத்தில்
மாணவர்கள் போராடட்டும்; அமைப்புகள் போராடட்டும். மாணவர்களின் குரலுக்கு முதல்வர் விஜய் செவிகொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய முதன்மையான கோரிக்கை.
நீங்கள் அப்படி இடம் ஒதுக்கிக் கொடுத்தால் உங்களுடன் சேர்ந்து நாங்களும் போராடுகிறோம். அனைவரும் இணைந்து போராடி நீட் தேர்வை ஒழிக்கலாம்..வாருங்கள் முதல்வர் விஜய் அவர்களே!
சென்னை சிபிஐ பாலன் இல்லத்தில் இளைஞர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மக்களுக்கு பல்வேறு செய்திகளை அந்தப் போராட்டத்தின் மூலம் கொண்டு சேர்க்கிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரையை ஏன் முதல்வர் விஜய் அரசு மூடி வைத்துள்ளது? எங்களுக்கு மெரினாவை மூடியதன் பின்னணி புரியவில்லை.
8 தலித்துகளை அமைச்சராக்கிட்டால் போதுமா?
8 தலித்துகளுக்கு அமைச்சர் பதவிகளை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார்தான். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகிவிட்டது. இவர்களில் அமைச்சர் வன்னி அரசுவைத் தவிர 7 தலித் அமைச்சர்கள் என்றைக்காவது தலித்துகளின் பிரச்சனைகளைப் பேசி இருக்கிறார்களா?
அமைச்சர் ராஜ்மோகன், எழும்பூர் தொகுதியில் நின்ற பின்னர்தான் அவர் தலித் என்பது தெரியும். ஏனெனில் ஒரு ஆக்டிவிஸ்ட், யூடியூபராக இருந்த ராஜ்மோகன் எந்த ஒரு தலித் பிரச்சனைக்காகவும் எப்போதும் பேசியது இல்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து ட்வீட் போட்டிருக்கிறார் அவ்வளவுதான். அவர் அமைச்சர் ஆனால் என்ன? ஆகவில்லை என்றால் என்ன?
அமைச்சர் வன்னி அரசுக்கு பாராட்டு
8 தலித்துகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது மட்டுமே ‘மாற்றம்’ இல்லை. அமைச்சர் வன்னி அரசு, தமக்கு அதிகாரம் கிடைத்த உடன் அவர் சில விஷயங்களை செய்கிறார். உண்மையில் அவரை பாராட்டுகிறோம். உண்மையில் அமைச்சர் வன்னி அரசுக்கும் எனக்கும் முரண்கள் இருக்கின்றன. ஆனால் அமைச்சர் வன்னி அரசுவின் நடவடிக்கைகளைப் பார்த்து நான் வியந்து போனேன்.
முதல்வர் விஜய், மக்களுடன் சேர்ந்து நிற்க வேண்டும். அதிகாரத்துக்கு வந்த உடன் சமரசம் செய்து கொள்கிற போக்கு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் சிலையை திறக்க முடியாத நிலைமை உள்ளது. ஆதிக்க ஜாதியினரை கண்டு ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர். உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக அச்சப்படுகின்றனர். அதனால்தான் அதிகாரத்தை தக்க வைக்க சமரசம் செய்கிறார்கள். இவ்வாறு இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.
