நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற முற்றுகைப் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து களத்தில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள பாலன் இல்லத்தில் மாணவர்களும், இளைஞர்களும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை ஆளுநர் மாளிகை அருகில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில் மறியல் மற்றும் வகுப்பு புறக்கணிப்பு:

மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் DYFI, SFI, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (மதுரை மாநகர் – புறநகர்), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு ஆகிய அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் DYFI சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு:
நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல மாணவர்கள் மீண்டும் ஒன்றிணையக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 300 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் கரம் கோர்க்கும் திரை நட்சத்திரங்கள்:
சென்னை எழும்பூரில் இன்று மாலை நடைபெறும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பிரபல இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டப் பல திரையுலகக் கலைஞர்களும் நேரடியாகப் பங்கேற்று உள்ளனர்.
