ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைக் கடந்து, இன்று (ஜூலை 23 ) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இப்படத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியான முதல் நாளான இன்று, அமைச்சர்கள் என். ஆனந்த், அருண் ராஜ், முகமது பர்வேஸ் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் திரையரங்கு சென்று படத்தைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்கில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய இளைஞர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது அந்த இளைஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தளபதி விஜய் ரசிகர்களின் குரல் ரொம்ப ரொம்ப வலிமையானது. நான் என் குரலைக் கொடுத்திருக்கிறேன்; நீங்களும் குரல் கொடுங்கள். நமக்குச் சரியான களமும், சரியான தளமும் இதுதான். நாம் எல்லோரும் ஒன்று கூடி உள்ள இந்த நேரத்தில் கண்டிப்பாக குரல் கொடுங்கள். கண்டிப்பாக மாற்றம் வரும். நம்புவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
