மீண்டும் ஒரு லாக்கப் மரணம்? தூத்துக்குடியில் இளைஞர் அருணாசலம் அதிர்ச்சி வாக்குமூலம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலம் என்பவரைப் பிடித்து போலீசார் அடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம். இவர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடை பாரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மதுக் கடை மூடிய பின்பு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகத் தென்பாகம் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 120 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அருணாச்சலத்தைக் காவல்துறையினர் விசாரணைக்காகத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில் தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், மொட்டை அடித்து தலையில் கட்டுடன் இருக்கும் அந்த இளைஞர், 3 போலீசார் தன்னை அடித்ததாகக் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், “காவல்துறையினர் அடித்ததால் தான் அருணாச்சலத்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும்; இல்லை என்றால் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

மேலும், அருணாச்சலத்தைக் காவலர்கள் நான்கு பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்றும், அந்த நான்கு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி சுனில் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

காவல்துறை விளக்கம்

இந்நிலையில் அருணாச்சலத்தை அடிக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்று அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share