நீட் போராட்ட எதிரொலி காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை கொண்டு வீசி வருவதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உள்ளது.
மாணவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய கூடும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர்கள் சிலை வரை கடற்கரைக்கு செல்லும் வழியில் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு போட்டு கண்காணித்து வருகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பீக் ஹவரில் மக்கள் செல்ல அனுமதியில் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
