நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியினரைப் பாதுகாக்க ‘நிஹாங்’ சீக்கியர் படையினர் (Nihang Sikhs) வாள் மற்றும் ஈட்டிகளுடன் களமிறங்கியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் சில இடங்களில் போலீசாருடனான வன்முறையில் வாள்களை ஏந்தியபடி வலம் வருகின்றனர் நிஹாங் சீக்கியர்கள்.
யார் இந்த நிஹாங் சீக்கியர்கள் (Nihang Sikhs)?
நிஹாங் சீக்கியர்கள் (Nihang Sikhs), சீக்கிய தேசிய இனத்தில் தனித்துவமான பாரம்பரியமான போர்க் குடியினர். இவர்கள் ‘அகாலி’கள் அதாவது ஆன்மீக இராணுவ பிரிவினர் என அழைக்கப்படுகின்றனர்.
சீக்கிய மதத்தின் 10-வது குருவான குரு கோபிந்த் சிங்கால் கி.பி. 1699-ம் ஆண்டு ‘கல்சா’ (Khalsa) படைப் பிரிவு தொடங்கப்பட்டதில் இருந்து ‘நிஹாங்’ சீக்கியர்கள் மரபு உருவானது. முகலாயர்கள் மற்றும் ஆப்கானிய படையெடுப்பாளர்களிடமிருந்து சீக்கிய மதத்தையும் சீக்கியர்களையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களாக களமாடியவர்கள்.
‘நிஹாங்’ என்ற பாரசீகச் சொல்லுக்கு ”அச்சம் அற்றவர்கள்” என அர்த்தம். போர்க்களத்தில் ”நிஹாங்” சீக்கியர்கள் வெளிப்படுத்திய வீரத்தால் அலறிப் போன முகலாயர்களால் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.
இவர்கள் பாரம்பரிய நீல நிற (Dark Blue) உடைகளை அணிகின்றனர். இவர்களது தலைப்பாகை இதர சீக்கியர்களிடம் இருந்து வேறுபட்டு மிகவும் உயரமாக இருக்கும். அந்த தலைப்பாகையில் எஃகு சக்கரங்கள் (Chakrams), மதச் சின்னங்கள் மற்றும் ஜெப மாலைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
’நிஹாங்’ சீக்கியர்கள் எப்போதும் கிர்பான் எனப்படுகிற சிறிய வாள், ஈட்டிகள், கத்திகள் மற்றும் பாரம்பரிய போர் கருவிகளை தாங்கியிருப்பார்கள்.
சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘கட்க்கா’ (Gatka) மற்றும் குதிரையேற்றத் திறமைகளைப் பெற்றவர்கள் என்கின்றனர்.
சீக்கியர்களின் புனித தலங்களான குருத்துவாராக்களைப் பாதுகாப்பதிலும், திருவிழாக்களின்போது மக்களை மிரள வைக்கும் பாரம்பரிய அணிவகுப்புகளை நடத்துவதிலும் நிஹாங் சீக்கியர்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.
ஜந்தர் மந்தரில் ‘நிஹாங்’ சீக்கியர் படை
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் போராடி வரும் நிலையில் திடீரென ‘நிஹாங்’ சீக்கியர் இளைஞர் படையினர் பெரும் எண்ணிக்கையில் பாரம்பரிய ஆயுதங்களுடன் குவிந்துள்ளனர்.
ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய நிஹாங் சீக்கிய படையினர், “நீதிக்காக, ஒடுக்கப்படுகிற மக்களுக்காக போராடுகிறவர்கள் நாங்கள்.. எங்களுடைய சகோதரர்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்படுகிற அநீதிகளைக் கண்டு நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு ஒருநாள் மட்டுமே இருக்க முடிவு செய்துதான் வந்தோம். ஆனால் இங்குள்ள நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனால் ஜந்தர் மந்தர் கிளர்ச்சி முடியும் வரை பாதுகாவலர்களாக இதே போராட்ட களத்தில் நாங்கள் நிற்போம்.
மேலும், “நாங்கள் தாக்கினால் யாருடைய உடலிலும் தழும்பு இல்லாத இடமே இருக்காது.. அந்த அளவுக்கு அடித்து துவைத்து எடுத்துவிடுவோம்.. போலீசாராக இருந்தாலும் குண்டர்களாக இருந்தாலும் எங்களுக்கு அச்சம் என்பது எல்லாம் கிடையாது” எனவும் எச்சரிக்கின்றனர்.

போலீசார் அச்சம்
அதே நேரத்தில், “நிஹாங் சீக்கியர்கள் இத்தனை பேர் எப்படி வந்தனர்? இவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்துடன் தங்களை எப்படி தொடர்பு படுத்துகின்றனர்? ஆயுதங்களுடன் போராட்டகாரர்கள் குவிவதை எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர்?” என பாஜக உள்ளிட்ட அரசு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் நிஹாங் சீக்கியர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வந்ததால்தான் இன்று ஜூலை 22-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசார் அடக்குமுறையை ஏவவில்லை என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
