அடக்குமுறைகளுக்கு நடுவே டெல்லியில் தொடரும் நீட் எதிர்ப்பு போராட்டம்: களத்தில் கனிமொழி தந்த வாக்குறுதி!

Published On:

| By Mathi

NEET protest continues in Delhi: DMK Kanimozhi's promise on the ground

நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் தொடருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஜூலை 22-ந் தேதி போராட்ட குழுவினரை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியின் உச்சகட்ட போராட்டம் ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியாக நடந்தது. இந்தப் பேரணியின் போது மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல்களை நடத்தினர்.

ADVERTISEMENT

பெல்லட் குண்டுகள், மின்சார லத்திகளால் தாக்குதல்

மேலும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியும் மின்சார லத்திகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோனம் வாங்சுக் 25-வது நாள் போராட்டம்

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் 25-வது நாளாக நீடிக்கிறது. இந்த நிலையில் சோனம் வாங்சுக் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT

ஜேபி நட்டா அழைப்பு நிராகரிப்பு

இதனிடையே மத்திய அமைச்சர் ஜேபி நட்டா இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை காக்ரோச் ஜனதா கட்சி நிராகரித்துவிட்டது. டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள் எனவும் மத்திய அரசுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டா அக்கவுண்ட் முடக்கம்

மேலும் காக்ரோச் ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மத்திய அரசு முடக்கி வைத்துவிட்டதாக அபிஜீத் திப்கே குற்றம்சாட்டி உள்ளார்.

ADVERTISEMENT

களத்தில் கனிமொழி…

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தருக்கு இன்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திமுக எம்.பி.க்கள் வில்சன், கான்ஸ்டாண்டைன் ரவீந்தரன், தங்க தமிழ்ச்செல்வன், கிரிராஜன் உள்ளிட்டோருடன் சென்று காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் பேசிய கனிமொழி எம்.பி, “நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கலைஞரும் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு திரண்டுள்ள மாணவர்களுக்கு திமுக ஆதரவாக நிற்கும். அநீதிக்கு எதிராக போராடும் மாணவர்களே! நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எங்களை நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதிகள் என அழைக்கட்டும்.. அதை பெருமையாக ஏற்கிறோம். ஏனெனில் நாட்டின் உரிமைக்காக போராடுகிறவர்கள் நாங்கள்” என்றார்.

திமுக உறுதுணையாக இருக்கும்- கனிமொழி

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “”நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தலைநகர் டெல்லியில் அறவழிப் போராட்டம் நடத்திவரும் மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து எங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்காக இன்று நாங்கள் வந்துள்ளோம்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் இன்று என்னுடன் வந்து, மாணவர்களின் போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்: மாணவர்களின் போராட்டத்தை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். இந்த நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து, நமது தலைவர் டாக்டர் கலைஞரும், அவருக்குப் பிறகு நமது தலைவர் மு.க. ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டவிடாமல் தடுக்கும் ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இந்த நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

டெல்லியில் போராடிவரும் மாணவர்களுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மாணவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதா?

இந்த நாட்டின் இளைஞர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் போராடும்போது, அவர்களை அடக்குவதும், அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு திமுக என்றும் உறுதுணையாக நிற்கும்” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share