மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தாமதாமாவது தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு சார்பில், ”இரு ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி விளக்கம் அளித்து பொதுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் இந்த விவகாரம் தமிழக பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளது. பொதுத்துறை தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இல்லை.
கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகளை நிலுவையில் வைத்தது ஏன்?
முன்னதாக பொதுத்துறை செயலாளராக பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
மேலும், ”இந்த விவகாரத்தில் சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றம் உள்ளிட்டவற்றை காரணங்களாக ஏற்க முடியாது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.
உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும் கோப்புகள் முடங்கியுள்ளன. இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று நீதிபதிஅதிருப்தி தெரிவித்தார்.
