டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட பாஜக ஆதரவு பெற்ற ”அபிஷேக் தாக்குர் சனாதனி” தலைமையிலான குண்டர்கள் களமிறக்கப்பட இருப்பதாக வீடியோவுடன் காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ”காக்ரோச் ஜனதா கட்சி”யின் கோரிக்கை. கடந்த ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய முற்றுகைப் பேரணியில் மிகப் பெரிய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இந்நிலையில் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியினரின் பாதுகாப்புக்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்களின் போர்க்குடியான ‘நிஹாங்’ சீக்கியர்கள் களமிறங்கி உள்ளனர்.
அதேநேரத்தில் தீவிர இந்துத்துவவாதியான ”அபிஷேக் தாக்குர் சனாதனி” தமது சோசியல் மீடியா பக்கங்களில், “Ready 4 Cockroach” என்ற தலைப்புடன் போலீசாரைப் போல லத்தியை காட்டி எச்சரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் தாக்குர் சனாதனியும் அவரது குண்டர் படையும் உ.பி. மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த அபிஷேக் தாக்குர் சனாதனி குறித்து ”ஆல்ட் நியூஸ்” ஜூபைர் அகமது முதலில் தமது சோசியல் மீடியாவில் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பாஜக தலைவர்களுடன் அபிஷேக் தாக்குர் சனாதனி இருக்கும் படங்களையும் ஜூபைர் அகமது பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது காக்ரோச் ஜனதா கட்சியும் தமது எக்ஸ் பக்கத்தில் அபிஷேக் தாக்குர் சனாதனியின் வீடியோவை பகிர்ந்து, “உ.பி.யில் பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கும், பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் அபிஷேக் தாக்குர் போன்ற பாஜக ஆதரவு குண்டர்கள் குழப்பத்தை விளைவிக்க டெல்லியில் களமிறங்கி உள்ளனர். இத்தகைய நபர்கள் குறித்து நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெல்லி போலீசாரும் அபிஷேக் தாக்குரை வீதிகளில் லத்தியுடன் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்காது என்று நம்புகிறோம்” என எச்சரித்துள்ளது.
