சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த ஜூன் 30-ந் தேதி இடதுசாரி எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “திருப்பியடித்த வரலாறு” நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: ”இப்போ பெரியாரை பற்றி நமக்கு கருத்து இருக்கு இல்லையா? அவர் பெரியார்தான், அதெல்லாம் சரிதான், நமக்கு எல்லாம் தெரிஞ்சதுதான். அப்படிப்பட்ட பெரியாரை, தஞ்சையினுடைய இந்த வரலாற்றின் பின்னணியில அவர வச்சு பார்த்தீங்கன்னா, ஒண்ணுமே கிடையாது.

திராவிட விவசாய தொழிலாளர் சங்கம்னு ஒரு சங்கத்தை அவர் ஆரம்பிக்கிறார். பெரியாருடைய அமைப்புல ஜனநாயகம் எல்லாம் கிடையாது! நீங்க நம்ம கட்சியில வந்து யாரு வேணாலும் யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறோம், இஷ்டம் போல பேஸ்புக்ல எழுதுறோம்… இவ்வளவு சுதந்திரம் உள்ள, ஒரு கட்சி ஜனநாயகம் இருக்கு இதுல; யார் வேணா கேள்வி கேட்கலாம்.
பெரியார் அப்படி கிடையாது! திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை 1954-ல் ஆரம்பிக்கிறார்.. அவர் எங்கே முடிவெடுத்தார்? இப்படி எல்லாம் கூடி முடிவெடுத்து செய்கிற பழக்கமே அவங்களுக்கு (தி.க.வுக்கு) இல்லை.

‘நான் திருச்சியில ஒரு நாள் இருந்தபோது இப்படி ஒரு சங்கம் துவக்க வேண்டும் என்ற நினைப்பு எனக்குத் தோன்றியது’ என்பார். அவ்வளவுதான்! நினைப்புத் தோன்றினா சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான். தலையில தோணுது… ‘நான் சொல்லுவதுதான் சட்டம், அதுதான் சாசனம்!’ அப்படித்தான் திராவிட இயக்கத்தினுடைய வரலாறு. அதுக்காகத்தான் அந்தத் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை அமைக்கிறார். அதற்கொரு தனி சாப்டர் இதுல வச்சிருக்கேன்.
சில தோழர்கள்… ஆரம்பத்துல படிச்ச தோழர்கள் கேட்டாங்க: ‘நம்ம கட்சி வரலாறு எழுதும்போது, அதுல போய் பெரியாருடைய திராவிட இயக்க விவசாய சங்கத்துக்கு ஒரு சாப்டர் ஏன் ஒதுக்கணுமா? அது சும்மா போற வழியில ஒரு சாப்டர்ல ஒரு அரை பக்கம் எழுதியிருக்கலாமே?’ அப்படின்னு சொன்னாங்க. இல்லை! இந்த வரலாற்றுல அவரை வச்சுப் பார்க்கணும், அப்பதான் நமக்கு அது புரியும்.
அவர் வாழ்நாள் முழுவதுமே கம்யூனிஸ்ட்களைப் பற்றி அவர் வச்சிருந்த கருத்து என்னன்னா… ‘கம்யூனிஸ்ட்னா வன்முறையாளர்கள்’ அப்படிங்கற கருத்துதான் பெரியாருடைய கருத்து! அவர் சாகுற வரைக்கும் அந்தக் கருத்துடன்தான் இருந்தார். வன்முறையின் மூலமாக தொழிலாளிகளுடைய கூலி உயர்வுக்காக போராடுவது தவறு என்பது அவருடைய கருத்து. இந்தப் போராட்டங்களை பூராத்தையுமே அவர் அப்படிதான் பார்க்கிறாரு.
ஆனா, இந்த வரலாற்றை வாசித்தோம்னா… கம்யூனிஸ்ட்கள் வன்முறையாளர்கள் என்ற கருத்து யாருக்குமே வராது.. வன்முறையை எதிர்கொண்டவர்கள், வன்முறையை சந்தித்தவர்கள் தான் கம்யூனிஸ்ட்கள்! ‘அடிச்சா திருப்பி அடி’ன்னுதான் நம்முடைய தலைவர்கள் சொன்னாங்களே தவிர, சும்மா இருக்கிற பண்ணையாரை போய் அடிச்சிட்டு வான்னு சொன்னாங்களா? எத்தனை நாள் அடி வாங்கிட்டே இருப்ப? திருப்பி அடின்னு – சீனிவாசராவ் சொல்றாரு, களப்பால் குப்பு சொல்றாரு. ஆகவே, பெரியாரைப் புரிந்து கொள்வதற்கே இந்த வரலாற்றை இங்கே வாசிப்போம்னு சொல்றேன்.

வெண்மணியைப் பற்றி பெரியாருடைய கருத்து என்ன? நான் வந்து இதை எங்கிருந்தோ பிக்கப் பண்ணி எழுதலை; அவர் எழுதிய கட்டுரையை அப்படியே எடுத்து கொடுத்துருக்கேன், நீங்க பாருங்க, இரண்டாவது வால்யூம்ல இருக்கு! ‘விடுதலை’யில் அவர் எழுதிய கட்டுரை, வெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறார்: ‘வெண்மணி போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’னு ஒரு லிஸ்ட் கொடுக்கிறார் பெரியார்.

ஒன்னு வந்து… கம்யூனிஸ்ட்ங்கிற பேர்ல கட்சி இருக்கக்கூடாது! ஏங்க, அதிர்ச்சியா இருக்கா உங்களுக்கு? இது அப்படியே அவர் எழுதியிருக்கார்! கம்யூனிஸ்ட்கள் பேர்ல கட்சி இருக்கக்கூடாது; ரெண்டே ரெண்டு கட்சி இருந்தா போதும், காங்கிரசும் திமுகவும் – இந்த ரெண்டு கட்சி இருந்தா போதும்.. அவங்க ரெண்டு கட்சியும்தான் யோக்கியம்.
கம்யூனிஸ்ட்ங்கிற பேர்ல கட்சி இருக்கக் கூடாது..இதுதான் அவரோட பார்வை.
இது கட்சிப் பிரச்சினையா? இரண்டு கட்சிகளுக்கு நடந்த போராட்டத்தில் 44 பேரை தீ வச்சு கொளுத்திட்டாங்களா? இது கட்சிப் பிரச்சினையா?
இது நெல் உற்பத்தியாளர் சங்கம் கிடையாது, கோபாலகிருஷ்ணன் நாயுடு கிடையாது, செங்கொடி இயக்கம் கிடையாது… ‘செங்கொடியை இறக்கி மஞ்சள் கொடியை ஏற்று’ன்னு சொன்ன போராட்டம் கிடையாது! இது எதுவுமே இல்லாம, ரெண்டு கட்சிக்கு இடையில உள்ள பிரச்சனையினால இது நடந்து போச்சுன்னு எழுதுறாரு.
இந்தியர்கள் இந்தியாவே ஆளக்கூடாது’ அதுதாங்க அடிப்படை பிரச்சனைங்குறாரு! இந்தியர்கள் ஆண்டாங்கன்னா பார்ப்பன ஆட்சிதான் இருக்கும்; ஆகவே, இந்தியர் ஆளக்கூடாது, அமெரிக்கக்காரன் ஆளட்டும், ரஷ்யாக்காரன் ஆளட்டும்!
இதெல்லாம் வெண்மணியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையில இருக்கு. சார், இங்க பாருங்க, இப்படி எப்படி பைத்தியத்தனமா எழுதுவாங்களான்னு தோணும் நமக்கு.. ஆனா, பெரியார் அப்படிங்கிறதால நாம அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. இதெல்லாம் ஆ.ராசா அப்படிங்கிற ஆள் படிக்கனும்..”. இவ்வாறு தமிழ்ச்செல்வன் தந்தை பெரியார் குறித்து பேசினார்.
விளாசிய பெரியாரிஸ்டுகள்
ச. தமிழ்ச்செல்வனின் இந்த விமர்சனத்துக்கு பெரியாரிஸ்டுகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன்: பெரியார் தனது இயக்கத்தை ஜனநாயகபூர்வமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் தோழர் தமிழ்ச்செல்வன்; முற்றிலும் உண்மை .

ஒற்றைப்படை தளபதி ஆக அவர் இயக்கத்தை வழி நடத்தியது சமூக ஜனநாயகத்திற்காக; தனது கட்சியின் ஜனநாயகத்துக்காக அல்ல.
எந்த விவாதமும் ஆலோசனையும் இல்லாமல் தனக்கு தோன்றியதால் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் தொடங்கினார் என்பது அவரது மற்றொரு விமர்சனம். தனது கம்யூனிஸ்ட் கட்சி அப்படிப்பட்டதல்ல என்று பெருமை பேசுகிறார்.
மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அறிக்கையை எப்படி தயாரித்தார்?
1848 ல் லண்ட னில் ஆறு வார காலம் தான் மட்டும் தனியே உட்கார்ந்து தனக்கு தோன்றியதை எந்தவித விவாதமும் இல்லாமல் அவரே தயாரித்து 1848 பிப்ரவரி 21ல் வெளியிடப்பட்டது தான் அந்த அறிக்கை.
அதற்குப் பிறகுதான் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது உலகிற்கு தெரிய வந்தது.
காரல் மார்க்ஸ் விவாதங்கள் நடத்தி எழுதவில்லை.. தனக்கு தானே எழுதிக் கொண்ட அறிக்கை என்று தோழர் தமிழ்ச்செல்வன் கூறுவாரா?
தனக்கு தோன்றியதை தானே எழுதிக் கொண்டார் என்று கிண்டல் அடிப்பாரா?
வரலாறுகள் உருவாக்கும் தலைவர்கள் தங்கள் சிந்தனை வழியில் தான் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டு இருக்கிறார்கள் என்ற புரிதல் இன்றி பேசலாமா?
புத்தரிடம் “பொலி ட்பீரோ” இருந்ததா?
இடதுசாரிகளோடு நட்பும் தோழமையும் வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்; விவாதம் நடக்க வேண்டும் என்று தோழர்கள் விரும்பினால்அதற்கு தயாராகவே இருக்கிறோம்.

திராவிடர் தளம் அதி அசுரன்: 1952 தேர்தலில் CPI (Manu) நடத்திய துரோகத்தை எதிர்த்து உருவாக்கப்பட்டதுதான் “திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்”!
CPI (Manu) கட்சியின் எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் அவர்களே! 1946 – 47 ல் ஆந்திரப் பார்ப்பனர் பிரகாசம் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலத்தில் தெலுங்கானா, மலபார், தஞ்சை பகுதிகளில் கம்யூனிஸ்ட்டு களை வேட்டையாடினார். அழித்தார்.
அந்த பார்ப்பனரை 1952 ல் மீண்டும் முதல்வராக்க கம்யூனிஸ்ட்டுகள் முயற்சி செய்தனர்.
பெரியார் கம்யூனிஸ்ட்டுகளிடம், உங்கள் பி.இராமமூர்த்தியைக்கூட ( அவரும் பார்ப்பனர் தான்) முதல்வராக்குங்கள். ஆனால், உங்கள் கட்சித் தோழர்களை ஒழித்த கொடுங்கோலன் பிரகாசம் வேண்டாம் என்றார். கம்யூனிஸ்ட்டுகள் கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டுக்கு ஒரு கொலைவெறிப் பார்ப்பனரை முதல்வராக்கத் துடித்த துரோகத்திற்கு எதிராக பெரியார் உருவாக்கியது தான் விவசாயத் தொழிலாளர் சங்கம்.
சாணிப்பால் சவுக்கடிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் தான் ஆயுதம் எடுத்தார்களா?
நாகை கீழ்வேளூர் அருகே வங்காரமாவடி என்ற ஊரில் கோதண்டபாணி நாயுடு என்பவரின் பண்ணையில் தொழிலாளர்கள் மீது சவுக்கடி கொடுப்பதற்காகவே திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கள்ளர்கள் அடியாட்களாக வேலை செய்தார்கள்.
தி.வி.தொ.ச.வின் போராளிகள் நாகை எஸ.எஸ்.பாட்ஷா, உத்திராபதி, திருமங்கலக்குடி கோவிந்தராசன், குடந்தை ஜோசப் போன்ற தோழர்கள் அந்த நாயுடுவையும், சவுக்கடி கொடுக்க வந்த கள்ளர்களை கட்டிப் போட்டு வெளுத்தனர். கோதண்டபாணி நாயுடு அதன் பிறகு விவசாயத்தை விட்டே ஓடிவிட்டார். இது ஒரு சாம்பிள் தான்.
கம்யூனிஸ்ட்டுகள், தி.வி.தொ.ச. ஆதரவாளர் ஒருவரின் கையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றதையும், பதிலுக்குக் கையை வெட்டிய கம்யூனிஸ்ட்டுகளின் வீடுகள் எரிந்ததையும், எரித்த வழக்கை எமது தோழர் நாகை எஸ்.எஸ்.பாட்ஷாவும் சந்தித்தார் என்பதையும் பழைய கம்யூனிஸ்ட்டுகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
பார்ப்பனப் பண்ணையார்களிடமும், பார்ப்பனர் அல்லாத பண்ணையார் களிடமும் வன்முறையை வன்முறையால் சந்தித்தவர்கள் தான் பெரியாரிஸ்ட்டுகள். களத்தில் இருந்தவர்களிடம் விசாரித்து எதையும் எழுதுங்கள். இது சினிமா திரைக்கதை அல்ல!
சாணிப்பால், சவுக்கடிகளை எதிர்த்துப் போராடியதாகச் சொல்லப்படும் சீனிவாசராவ் அவர்கள் எத்தனை பார்ப்பன மடங்களின் நிலங்களில் சாணிப்பால்களுக்கு எதிராகப் போராடினார்?
எத்தனை சைவ ஆதீன மடங்களின் நிலங்களில் சவுக்கடிகளுக்கு எதிராகப் போராடினார்? ஏதாவது இருந்தால் சான்றுகளுடன் கூறுங்கள்.
கீழ்வெண்மணியில் பெரியாரிஸ்ட்டுகளின் பங்கு என்ன? இதோ கம்யூனிஸ்ட் தியாகு எழுதியதைப் படியுங்கள்:
கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான காவலாக்குடி மதி’ இன்னும் உயிரோடு இருக்கிறார். (திராவிடர் கழகத்தின்) குடந்தை ஆ.பி.எஸ். ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தலித் மக்களாக இருந்தார்கள். கொளுத்திய நில உடைமையாளர்கள் அனைவரும் பார்ப்பனர், நாயுடு, தேவர்களாக இருந்தார்கள்.
அங்கு விவசாயத் தொழிலாளராக ஒரு பார்ப்பனரும் இல்லாதது ஏன்? நில உடைமையாளராக ஒரு தலித் கூட இல்லாததும் ஏன்?
இந்த இந்து மத, ஜாதிய சமுதாய அடித்தளத்தை அழிக்க கம்யூனிஸ்ட்டுகள் 1925 முதல் இன்று வரை செய்தது என்ன? இந்து மதத்தை எதிர்த்த உங்கள் வேலைத் திட்டங்கள், செயல் திட்டங்கள் என்ன?
பார்ப்பன, இடைநிலை ஜாதிகளை உரிமையாளர்களாகவும், தலித் ஜாதிகளைத் தொழிலாளர்களாகவும் பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்க வைக்கும் இந்து மத வாழ்க்கைமுறையை எதிர்த்து நீங்கள் நடத்திய “ஜனநாயகப் பூர்வமான” பொலீட்பீரோ நடவடிக்கைகள் என்ன?
”கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள்பற்றோ, மதப்பற்றோ, சாஸ்திரப்பற்றோ, ஜாதிப்பற்றோ, நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருக்கக்கூடாது. லட்சியப் பற்று, வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்கவேண்டும்.
நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில்லையே! இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங்களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிஸ்ட்டாக முடியும்?
விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர்கள் எப்படி உண்மை கம்யூனிஸ்ட்டாக முடியும்? கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்ட்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே, அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்கவேண்டும்?
கம்யூனிஸ்ட் தோழர்களே! நான் சவால்விட்டே கேட்கின்றேன் நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கு ஆன படிப்பினை என்ன இருக்கிறது?
தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா? சும்மா வீதிக்குவீதி பாரதிவிழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்று கொண்டாடுகின்றார்களே அந்த பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்கின்றதினால் அவனுக்கு பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இந்தக் கடவுளை கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம் என்று மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டாமா? நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும்.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும் அவர்களை மக்களை மக்களாக மதித்து நடக்கச் செய்ய உணர்த்த வேண்டாமா? இவர்களின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாமா?”
– தோழர் பெரியார் – விடுதலை – 02.02.1966

மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி: பெரியாரை அதிதீவிரமாக இலக்கு வைத்து ஆய்வு செய்பவர்களின் நோக்கம் தொழிலாளர் விடுதலை என்பதாகவோ, பண்ணையார்தன ஒழிப்பு என்பதாகவோ இருக்கும்பட்சத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பேச இயலும்.
ஆனால் பெரியாரை விமர்சிப்பவர்களுக்கென தனித்த வன்மமும், நோக்கமும் உண்டு. அதை மறைத்தே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்த நிலைப்பாட்டை வைத்து ஒருவரை முழுமையாக வரையறை செய்துவிட இயலாது. அக்குறிப்பிட்ட சம்பவத்தினை அவர் எவ்வாறாக பகுப்பாய்வு செய்துகொண்டு அணுகினார் என்பதிலிருந்தே ஆய்வு செய்ய இயலும். பெரியார் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கம் கட்டியவரல்ல, அவரது பார்ப்பன ஜமீந்தாரி எதிர்ப்பு நிலம் விடுதலையடைவதற்கு காரணியாகவும் அமைந்தது. தொழிலாளர்கள் சாதியிலிருந்து விடுபட்டால் மட்டுமே வர்க்கமாக ஒன்றிணைய இயலும் எனும் வாததிலிருந்து அவரது தொழிலாளர் குறித்த பார்வையை அணுக இயலும்.
வர்க்க ஒழிப்பிற்கு சாதியொழிப்பு முன்நிபந்தனையாக இருப்பது அவரது நிலைப்பாடு. இந்நிலையில் கூலி உயர்வு என்பது வர்க்க ஒழிப்பாகவோ, சாதி ஒழிப்பாகவோ மாற இயலாமல் தீவிர வன்முறைச் சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், சமபலமற்ற-ஒன்றுபடுத்தப்படாத தொழிலாளி வர்க்கம் முதலாளிகளால் வன்முறைக்குள்ளாக்கப்படும் வகையில் பலியிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளிகளில் இருந்து எழும் தலைமை இப்படியாக, தொழிலாளிகளை பலியிடும் வகை அரசியலை செய்யாது என்பதை அவர் சுட்டி காட்டி உள்ளார்.
தொழிலாளி சிக்கலை பெரியார் அணுகிய விதத்தை வைத்தே அவரை மீளாய்வு செய்ய இயலும். தொழிலாளி வர்க்கத்தை, பார்ப்பன தலைமையிலான சந்தர்ப்பவாத கட்சியிடம், குறிப்பாக, உடல் உழைப்பில் ஈடுபடாத ஒரு வகுப்பாரின் தலைமையில் விட்டுச் செல்வதை அவர் மறுக்கவே செய்கின்றார்.
தேர்தல் வெற்றிக்காக தொழிலாளர் உரிமைகளை பயன்படுத்தும் அரசியலை அவர் வெகுகாலத்திற்கு முன்பே சுட்டுகிறார். இன்றுவரை அந்த நிலையைத்தான் இந்திய தொழிலாளி வர்க்கம் சந்திக்கிறது.
ஊதிய உயர்வு எனும் வலைக்குள்ளாக சிக்கிக்கொண்ட தொழிற்சங்கங்கள், கூலி உயர்வு எனும் கோரிக்கைக்குள்ளாக சிக்கவைக்கபப்ட்ட பாட்டாளிகளை இதுவரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அதிகாரத்தை
நோக்கி நகர்த்த இயலவில்லை. அவர்கள் அதிகாரத்தில் பங்குகேட்கும் பயிற்சியையோ, அதிகாரத்தை கைபப்ற்றும் அரசியலையோ தமது தொழிற்சங்கங்கள் வாயிலாக கற்றுத்தரவில்லை. மாறாக பேரம்பேசி கூலி உயர்விற்கு சாத்தியமாகும் அரசியல் பயிற்சியே அவர்கள் கற்றுக்கொடுத்தனர்.
பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி சாத்தர் பேசியதை போன்று, ‘தனது வர்க்கத்திற்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தையோ, அதிகாரத்தையோ வென்றெடுக்காத தொழிற்சங்கங்களாக இக்கட்சிகள் மாறிப்போயின’ என்பதைப் போன்றது பெரியாரின் பார்வை..
கூலி உயர்வு கேட்டதை பிரதானப்படுத்தாத பெரியாரை தொழிலாளர் எதிரியாக கட்டமைக்கும் மார்க்ஸிஸ்டுகள், நில உரிமைக்காக போராடிய நக்சல்பாரிகளை எவ்வாறு கையாண்டார்கள்?
நக்சல்பாரி எழுச்சியை தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறையில் அழிக்கப்பட்ட பாட்டளிவர்க்க போராளிகள் எத்தனை பேர்?
சி.பி.எம் கம்யூனிஸ்டுகளுக்குள்ளாக இயங்கிய வன்முறைசார் அரசியலை பெரியார் சுட்டிக்காட்டியவர். வாய்ப்பிருந்தால் விரிவாகபேசலாம்.
ஆனால் பெரியார் மீதான தனிபப்ட்ட வன்மத்தை கொண்டோரை வைத்து வாதிக்க இயலாது.

மூத்த பத்திரிகையாளர் அருள் எழிலன்: தந்தை பெரியார் குறித்த தோழர் தமிழ்செல்வன் அவர்களின் கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
சிபிஎம் கட்சியினரில் ஏராளமானோருக்கு இப்படி ஒரு பார்வையும் ஒவ்வாமையும் திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் உண்டு.
பெரியார் பற்றி இப்படியான பார்வை இருக்கும் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் மீது என்ன பார்வை கொண்டிருப்பார் என்பதையும் ஊகித்துக் கொள்ள முடிகிறது.
பெரியார் பற்றி இப்படி ஒரு கருத்து தோழர் தமிழ் செல்வனுக்குள் இருக்கிறது என்பது இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது.
பெரியார் கிராமங்கள், விவசாய தொழிலாளர்கள், கிராமத்தன்மை இவை அனைத்தையும் சாதி ஒழிப்பு எனும் அரசியல் எண்ணத்தில் இருந்து பார்த்தார். கிராமத் தன்மை நகரத் தன்மையால் மாற்றியமைக்க முயன்றதும் சாதி ஒழிப்புப் பார்வைதான்.
இந்தியத் தன்மை என்பது கிராமத் தன்மை என்றும் அது சாதி பண்பாட்டின் தொட்டிலாக இருப்பதையும் வெளிப்படையாக போட்டுடைத்தவர் பெரியார். கிராமத்தன்மை என்ற பண்பாடுக்கும் சாதிக்கும் இருக்கும் தொடர்பை ஆபத்தான ஒன்றாக பார்த்தார். அதனால் கிராமங்கள் ஒழிய வேண்டும் என்றார்.
இந்த பண்ணை பண்பாட்டில் இருந்து வரும் தலைவர்கள் நம்மை ஆள்வதை விட வெள்ளையர்கள் ஆட்சி செய்தால் அதிகாரம் இல்லாத நம் மக்களுக்கு அவர்களிடம் இருந்து அதிகாரம் பெற முடியும் என நம்பியதும் உண்மைதான்.
சதி முதல் பொதுக் கல்வி வரை வெள்ளையர்கள் வராமல் போயிருந்தால் அவர்கள் நம்மை ஆட்சி செய்யாமல் போயிருந்தால் இந்த அளவுக்கேனும் நாம் முன்னேறியிருப்போமா?
கிராமங்கள் அழிய வேண்டும் என்றதும். பினன்ர் ஆட்சிக்கு வந்த திமுக அதிமுக கிராமப்புற கட்டமைப்பை நகரத் தன்மைக்கு மாற்றியமைத்ததெல்லாம் இந்த பின்னணியில்தான்.
ஆக, சாதி அது சார்ந்த பண்பாட்டில் இருந்துதான் இதை பார்க்க வேண்டும். தஞ்சை நிலம் அந்த பண்ணையடிமைத் தனத்தின் தமிழ்நாட்டு அடையாளமாக இருந்ததென்னமோ உண்மைதான்.
சீனிவாசராவ் போன்ற தோழர்கள் ஆதீனங்கள், மடாலயங்கள், பண்ணை முதலாளிகளிடம் கூலி கேட்டு போராடிக் கொண்டிருந்த போது பெரியார் தொடங்கிய திராவிட விவசாய சங்கம் உழைப்பவனுக்கு நிலத்தில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்தது.
இந்த பின்னணியில் உருவான நிலச் சீர்திருத்தம் கலைஞர் காலத்தில் தீவிரமடைந்தது. அது முழுமையடையவில்லை என்ற போதும் சிறு, குறு விவசாயிகள் என்றொரு வர்க்கம் திராவிட இயக்கம் உருவாக்கிக் கொடுத்தது அல்லவா?
கம்யூனிஸ்டுகள் தங்களின் அரசியல் கிளர்ச்சி நோக்கங்களுக்காக கிராமத்து மனிதர்களை கொல்லக் கொடுக்கிறார்கள்; இவர்கள் ஓடி விடுகிறார்கள். மக்கள் வதைபடுகிறார்கள் என்ற பார்வை பெரியாரிடம் இருந்தது. கீழ்வெண்மணி படுகொலைகள் தொடர்பானதும் அப்படியான பார்வைதான். அது தவறானதாக இருக்கலாம். ஆனால் அதில் உள்ள அக்கறை களங்கமற்றது அல்லவா?
சாதிப் பண்பாடுதான் கிராமத்துப் பண்பாடு என்றான போது அதை முற்றிலும் மாற்றியமைக்க முயன்றார் பெரியார். அதில் திராவிட ஆட்சிமுறை பெருமளவு ஓரளவு அல்ல பெருமளவு வெற்றி பெற்றிருப்பதும் யதார்த்தம் அல்லவா?
ஆங்கிலம் அறிந்த ஒரு தலைமுறை சென்னை முதல் கன்னியாகுமரி வரை உருவாகி நிற்பதும். கிராமப்புற உற்பத்தியை விட பெரும் லாபம் ஈட்டும் உற்பத்தியாக நகர்ப்புற கட்டமைப்பு வளர்ந்து நிற்பதும் நாம் காணும் புதிய தமிழ்நாடு இல்லையா?
மற்றபடி திராவிட இயக்க கருத்து நிலைகளை மார்க்சிய கண்டோட்டத்தில் விமர்சிப்பதில் தவறில்லை. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் முன்பே அதை செய்துள்ளார்கள். துரதிருஷ்டமாக தோழர் தமிழ்செல்வனின் பெரியார் பற்றிய பார்வையில் விமர்சனம் இல்லை வெறுப்புதான் இருக்கிறது.
இடதுசாரிகளின் எதிர்வினை
முதுபெரும் இடதுசாரியாளர் மேதுரா: வேண்டாத திக்கில் இந்தக் கலந்துரையாடல்கள் செல்கின்றன. பெரியார் சமூகநீதிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு, பகுத்தறிவுப் பார்வையில் சமூக சீர்திருத்தத்தை முன்னிலைப்படுத்தினார்.

அவர் கூறிய கடவுள் மறுப்புக் கொள்கைகளும் பிற சமூக ஏற்றத்தாழ்வுச் சிக்கல்களும் கலந்துரையாடி முடிவெடுக்கக்கூடியனவல்ல.
அன்றாட நடைமுறைகளில் அறிந்து, அறிவியல் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை.
இதனால்தான், அவர் கூறிய கருத்துக்களை மேலும் வலுப்படுத்த, விரிவுபடுத்த, பரப்ப ஆங்காங்கு பலர் முன்வந்தார்கள். அவர்களெல்லாம் இணைந்து ஓர் இயக்கமாகச் செயல்பட்டார்கள்.
அந்த இயக்கம் அரசியல் முடிவுகளை எடுப்பது, ஆட்சி அமைக்க முயற்சிப்பது, தேர்தலில் போட்டியிடுவது என்பன போன்ற கொள்கைநிலைகளில் இருக்கவில்லை.
அப்படிச் சில அரசியல் முடிவுகள் அல்லது அறிவிப்புக்கள் அல்லது செயல்பாடுகள் இருந்திருந்தாலும் அவை எப்போதும் பெரியாருடைய அடிப்படை நோக்கங்களை மாற்றிவிடவில்லை. அவை அவருடைய அடிப்படைப் பரப்புரைகளோடு முரண்படவில்லை.
தன்னுடைய பரப்புரைகளின்போது பெரியார், ‘நான் சொல்வதை எண்ணிப்பார்த்து, ஏற்கக்தக்கனவாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்’ என்றுதான் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நோக்கங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் வேறு.
பெரியாருடைய நோக்கங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் வேறு. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதில்லை.
குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் ஒன்றை மறுத்துவிடமுடியாது; மறந்துவிடவும் கூடாது. பெரியார், பயிரிடுவதற்கு முன்னர் நிலத்தை உழுது சீர்படுத்த நினைத்தார். தமிழ்நாட்டின் நிலைமைகளில், தொடக்கக் கட்டத்தில் பொதுவுடைமை இயக்கம் உழவு செய்யாமலேயே, நிலத்தைப் பண்படுத்தாமலேயே பயிரிட முடியும் என நம்பினர்.
இப்போது வேண்டிய புரிதல்கள் தோன்றியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் விரிவான ஆய்வுக்குரியன.
பெரியாரைப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எதிராகக் கருதியதும், கருதுவதும் வேண்டாத விளையாட்டாகும். பகைவர்களைப் பாலூட்டி வளர்ப்பதாகும்.

கற்பகவிநாயகம் சுப்பையா: கம்யூ.லீக் எனும் அமைப்பு மார்க்சிடம் ஒரு அறிக்கை எழுதித் தரக் கேட்டுக் கொண்டது. அதை அவர் செய்தார். அதற்கும் பெரியார் ஒரு அமைப்பை தன் சிந்தனையில் தோன்றியதால் ஆரம்பித்தேன் என்று சொன்னதும் ஒன்றா?
ஜனநாயக மத்தியத்துவம்தான் லெனின் உருவாக்கிய உட்கட்சி ஜனநாயகம்.. அதற்கு நேர் எதிர் பாணிதான் பெரியாரின் பாணி.
மார்க்ஸ் உருவாக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த – ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகள் பங்கெடுத்தன. பஃகுனின் முன் வைத்த அராஜகம் விவாதிக்கப்பட்டது. பிரெஞ்சு கற்பனாவாத சோசலிஸ்ட்களுக்கு அங்கு இடம் இருந்தது.. ஜனநாயக முறைப்படிதான் கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸின் முதலாம் அகிலம் இயங்கியது.

முரசொலி தலையங்கம்
ச. தமிழ்ச்செல்வனுக்கு பதிலளித்து திமுகவின் முரசொலி நாளேட்டில் (ஜூலை 23) எழுதப்பட்டுள்ள தலையங்கம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவருமான ச.தமிழ்ச்செல்வன், கீழ்வெண்மணிக் கொடூரம் குறித்து ஆற்றிய உரையில் தந்தை பெரியாரையும், தலைவர் கலைஞரையும் மிகக் கீழ்த்தரமான விமர்சனத்தைச் செய்துள்ளார்.
1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாளன்று கீழ்வெண்மணியில் 44 உயிர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டன. கூலி உயர்வு கேட்டார்கள் என்ற காரணத்துக்காக பண்ணையார்களால் பூட்டிய வீட்டுக்குள் தீ வைத்து கொளுத்தப்பட்டன அந்த உயிர்கள். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்களைத் தொகுத்து ‘திருப்பி அடித்த வரலாறு’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். அந்த நூல் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ஆய்வு நோக்கமோ, ஆராய்ச்சிக் கருத்துக்களோ இல்லாமல் கிண்டல், நக்கல் தொனியில் பெரியாரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
கீழ்வெண்மணி கொடூரம் தொடர்பாக பெரியார் வெளியிட்ட அறிக்கையை முழுமையாக உள்வாங்காமல் மேலோட்டமாக படித்து விட்டு பேசி இருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். அப்போது பெரியாருக்கு 90 வயது. அன்றைய தேதியில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் இருந்தார். ஐந்து நாட்கள் கழித்துதான் மருத்துவமனையில் இருந்து வந்தார். மருத்துவமனையில் இருந்தபடியே தான் அந்த அறிக்கையை எழுதினார்.
காந்தி கொலை, காமராசரை வீட்டுக்குள் வைத்து கொளுத்த முயற்சித்தது போன்ற வன்முறைக்கு இணையானது கீழ்வெண்மணி சம்பவம் என்று பெரியார் சொல்கிறார். இதுபோன்ற சட்டவிரோத, பலாத்கார நாச வேலைகளை இன்றைய சட்டங்கள், நீதிமன்றங்கள், ஜனநாயக அமைப்பு முறைகள் மூலமாகத் தீர்க்க முடியாது என்கிறார் பெரியார். அரசும், போலீசும், சட்டமும், நீதிமன்றங்களும் யாருக்கு சார்பாக இருக்கும் என்பது தான் பெரியார் எழுப்பும் கேள்வி ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்ததை வைத்து பார்த்தால் பெரியார் அறிக்கையின் உண்மையான பொருள் புரியும்.
கீழ்வெண்மணி கொடூரம் குறித்து ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தார் பெரியார். அதைத் தெரிந்து கொள்ளாமல் பெரியாரை ‘மடத்தனம்’ என்பதுதான் மடத்தனம் ஆகும்.
‘திராவிட இயக்கம் குறித்த ஓர் ஆவணம்’ என்ற தலைப்பில் 1951 இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதை தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் பார்க்கவும். சமூக சீர்திருத்தக் கொள்கைக்குள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் ஜனநாயக உள்ளடக்கமும் உண்டு என்கிறது அந்த அறிக்கை. இதனை ஆதரித்து பி.ஆர்.பரமேஸ்வரனும், நல்லசிவமும் பிற்காலத்தில் எழுதி இருக்கிறார்கள்.
“நான் பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் போயிருந்தால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று சொன்னவர் கலைஞர். அந்தக் கம்யூனிஸ்ட் (கலைஞர்) ஆட்சிக்கு வந்துவிட்டார். அவர் தான் பக்கிரிசாமியை சுட்டுக் கொன்றார்’’ என்கிறார் ச.தமிழ்ச்செல்வன். கீழ்வெண்மணி சம்பவம் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. இது கூடத் தெரியவில்லை அவருக்கு.
புற்றுநோயால் தனது வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் இருந்தார் முதலமைச்சர் அண்ணா. இரண்டு மாதத்தில் மறைந்தார் அண்ணா. எத்தகைய சூழ்நிலையில் அண்ணா இருந்தார் என்பதும் முக்கியமானது. கீழ்வெண்மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞரை அனுப்பி வைத்தார். அவர் வரும் வரை காத்திருந்தார். இரவு 12 மணிக்கு கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசிவிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு நிருபர்களைச் சந்தித்தார் அண்ணா.
இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வந்த போது உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள், ‘‘அந்த நிமிடமே அண்ணா கண்ணீர் விட்டார். மறுநிமிடமே அந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கைவிட்டார். அவர் உடல் நலமற்று இருந்ததால் அமைச்சர்களை உடனே வெண்மணிக்கு அனுப்பி நிலைமைகளை அறிந்து வரச் செய்தார்’’ என்று பேசி இருக்கிறார். விசாரணை ஆணையம் வேண்டாம், கொலை வழக்காகப் பதிவு செய்யுங்கள் என்று முதல்வர் அண்ணாவிடம் சொன்னதும் பி.ராமமூர்த்தி அவர்கள் தான்.
1969 பிப்ரவரி 3 அன்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் மறைந்தார்கள். முதலமைச்சராக கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றார். 1969 ஜனவரி 27, பிப்ரவரி 25, 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கீழ்வெண்மணி தொடர்பான விவாதம் நடைபெற்றது. 28.2.1969 அன்று விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் கலைஞர் பேசினார். மிராசுதார் கோபாலகிருஷ்ணனை ‘கொடும்பாவி’ என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் கலைஞர்.
1969 சனவரி 10 அரசு, விவசாயிகள், பண்ணையார்கள் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை தி.மு.க. அரசு ஏற்பாடு செய்தது. 17 உடன்பாடு ஏற்பட்டது. இதனடிப்படையில் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. கணபதியா பிள்ளை ஆணையத்தின் அறிக்கையும் 1969 செப்டம்பரில் வெளியானது. இதனை முழுமையாக தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது. ஆணையம் நிர்ணயித்த கூலியையும் விவசாய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியாயமான கூலிக்கான சட்டத்தை இயற்றியது. தொடக்கத்தில் இந்த சட்டம் கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு, இதனை மாநிலம் முழுமைக்கும் அமல்படுத்தியது.
1971 ஆம் ஆண்டு நில உச்சரம்புச் சட்டத்தை திருத்த முதலமைச்சர் கலைஞர் எடுத்த முயற்சிக்கும் இந்த சம்பவம் தான் முக்கியமான காரணம் ஆகும்.
கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். பிற்காலத்தில் கோபாலகிருஷ்ணன், கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி கலைஞர் தனது ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதி இருக்கிறார்… ‘‘கோபாலகிருஷ்ணன் என்ற நிலப்பிரபு வெண்மணி நிகழ்ச்சி நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு கொலையுண்டார் என்பதிலிருந்து வெண்மணியின் வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்” என்று எழுதி இருக்கும் கலைஞரைத் தான் கிண்டல் அடிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
“இந்தியாவில் கம்யூனிசம் பரவாமல் கம்யூனிஸ்ட்டுகளே பார்த்துக் கொள்வார்கள்’’ என்று பெரியார் சொன்னார். அதைத் தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
