நீட் (Neet) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Modi) வாக்குறுதி அளித்துள்ளார்.
நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்; நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று 34 நாட்களாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன; ஆனால் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை” என விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, “ராகுல் காந்தி கூறிய 150-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவுகள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த அல்லது ஆட்சி செய்யும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. அது குறித்து ஏன் பேசவில்லை?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
மோடி திடீர் அறிவிப்பு

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென தமது எக்ஸ் பக்கத்தில், “நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
காக்ரோச் ரியாக்சன்
பிரதமர் மோடி இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சி, “தர்மேந்திர பிரதான் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்” என பதில் அளித்துள்ளது.
