மண்டி போட்டு மண் சோறு.. விஜய் ரசிகர்களை விளாசிய விசிக ஆளூர் ஷா நவாஸ்

Published On:

| By Mathi

VCK's Aloor ShaNavas Slams Vijay Fans

நீட் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் நிலையில் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு (முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்) மண்டி போட்டு மண் சோறு சாப்பிடுகிற இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவும் பகலும் விடிய விடிய தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ஆளூர் ஷாநவாஸ் அங்கு பேசியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இன்றைக்கு தலைநகர் டெல்லி கிடுகிடுத்துப் போயிருக்கிறது. இது மிகப்பெரிய போராட்டம்; எழுச்சிமிக்க போராட்டம்.

ADVERTISEMENT

ஆனால், இந்த போராட்டத்தின் விதை எந்த மண்ணில் போடப்பட்டது என்றால் பெருமை பொங்கச் சொல்ல முடியும்.. ஆம் நம் தமிழ்நாட்டில் போடப்பட்ட விதை!

இந்தியாவின் எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டன. அப்போது நீட் தேர்வை ஏற்க முடியாது என சொன்ன ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான். நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்று சொன்ன மாநிலம் நம் தமிழ்நாடு.

ADVERTISEMENT

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டனர். தங்கை அனிதாவில் தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயின. அந்த ரத்தத்தின் மீதும், அவர்களது கண்ணீரின் மீதும் கட்டப்பட்ட சாம்ராஜ்யம் தான் நீட் தேர்வு.

ஆனால், ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. மறுபுறம் எதற்காகவோ மண் சோறு சாப்பிடுகிறார்கள் என்றால், இதுதான் நம் சமூகத்தின் முரண்பாடாக இருக்கிறது.

ADVERTISEMENT

வெளியாகப் போகிற ஒரு திரைப்படத்திற்காக, அது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் மண்டியிட்டு மண் சோறு சாப்பிடுகிறார்கள் என்கிற ஒரு செய்தியை பார்த்துவிட்டு வந்தேன். அத்தகைய இளைஞர்கள் இருக்கிற நாட்டில், இப்படிப்பட்ட இளைஞர்களும் இருக்கிறீர்கள் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

உரிமைக்காகப் போராடுகிற இளைஞர்கள் இருக்கிறீர்கள்; அரசியல் அற்ற அரசியலை செய்வதற்கு இளைஞர்கள் வந்திருக்கிற சூழலில், உண்மையான அரசியலைப் பேசுகிற இளைஞர்கள் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதில் பெருமைதான். இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share