மாநிலங்களின் மீது நம்பிக்கை வைத்து நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


தி இந்து நாளேட்டில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசு 3 முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.
- ஏராளமான நுழைவுத் தேர்வுகள் என்கிற சுமை குறைக்கப்படும்
- கூடுதல் கட்டணம் மற்றும் மருத்துவ சேர்க்கை வணிகமயமாக்கப்படுதல் ஆகியவை ஒழிக்கப்படும்
- தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைவதை உறுதி செய்வதன் மூலம் தரம் உயர்த்தப்பட்டு, சிறந்த மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த அம்சங்கள் ஒவ்வொன்றிலுமே நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது.
சமத்துவத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றல் மையங்களை பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்றிவிட்டது.
தகுதி என்பது பயிற்சி மையங்களை அடிப்படையாகக் கொண்டதாக, தேர்வு எழுதும் உத்திகளில் தேர்ச்சி பெறும் திறனாலேயே அளவிடப்படுவதாக மாறிவிட்டது.
அதிகமாக பணம் செலவழித்து பயிற்சி பெற சக்தி உள்ளவர்களுக்குதான் நீட் தேர்வானது பெருமளவில் சாதகமாகிவிட்டது.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மாநில மொழிகளில் பயில்வோருக்கு நீட் தேர்வு என்பது மிகப் பெரும் பாதகமாகிவிட்டது.
இந்த கவலை எல்லாம் தமிழ்நாடு முன்கூட்டியே உணர்ந்தது. அதனால்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களை அப்படிச் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
நீட் தேர்வு என்பது எப்போதுமே நடைமுறை சார்ந்தத பிரச்சனை இல்லை; நீட் தேர்வு விவகாரம் என்பது ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினை.
தற்போது நடந்துவரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்; மாநிலங்களை மத்திய அரசு நம்புவதற்கான நேரம் இது.. நீட்டை ஒழிப்பதற்கான தருணம் இது.. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
