நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி போராட்டத்தில் ”பாஜக குண்டர்கள்” ஊடுருவி போலீசார் மீது கல்வீசித் தாக்கி உள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லியில் இன்று ஜூலை 23-ந் தேதி செய்தியாளர்களிடம் அபிஜீத் திப்கே கூறியதாவது: டெல்லி போலீசார் எங்கள் மீது நடத்திய தடியடி மிகக் கொடூரமானது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட போலீசாரை நிச்சயம் நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.
டெல்லியில் 34-வது நாளாக போராட்டம் தொடருகிறது. சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டமும் நீடிக்கிறது. 28-வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும். அதே நேரத்தில் சோனம் வாங்சுக் தமது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவரது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை.
எங்களது தொடர் போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்ட சதி நடைபெறுகிறது. திட்டமிட்டே வெளிநபர்கள் உள்ளே ஊடுருவுகின்றனர். நாங்கள் இங்கு ஒரு மாதமாக அமர்ந்துள்ளோம். போலீசார் மீது கல்வீச்சு போன்ற எந்த ஒரு சம்பவமுமே நடந்தது இல்லை. ஆனால் இப்போது போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாஜக ரவுடிகளை அனுப்பி வருகிறது. கல்வீச்சில் ஈடுபடும் நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான். காவல்துறைதான் லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் ஊடுருவி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு காக்ரோச் ஜனதா கட்சி மீது பழிபோடுகின்றனர். இவ்வாறு அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
