“போராட்டங்களை தூண்டிவிடுவதுதான் கம்யூனிஸ்டுகளின் வேலை; ஆனால் டெல்லி அடக்குமுறையால்தான் தமிழ்நாட்டில் தற்போது மாணவர்கள், இளைஞர்கள் போராடுகின்றனர்.. அவர்களை தமிழக காவல்துறை ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது” என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற முற்றுகைப் பேரணி போராட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு காவல்துறையையும், துணை ராணுவப் படையையும் ஏவி, கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அடக்குமுறையை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம்
ஆனால் தமிழ்நாட்டில் போராடக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
போராடுகிற உரிமையை இந்திய அரசியல்தாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. போராட்டத்தை முறைப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான் காவல்துறையினுடைய பணி. ஆனால் போராட்டத்தையே முற்றிலுமாக தடுத்து நிறுத்துவது என்கிற முறையில் தமிழ்நாடு காவல்துறையினுடைய செயல்பாடு என்பது அமைந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
விஜய் அரசுக்குதான் கெட்ட பெயர்
காவல்துறையினுடைய இந்தப் போக்கை மாற்றுவதற்கும், போராடுகிற ஜனநாயக உரிமையை அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், தமிழ்நாடு காவல்துறைக்கும், மாணவர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும், இளைஞர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும், தொழிலாளர்களுக்குமான இந்த மோதல் தமிழ்நாடு அரசுக்கு எதிரான ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தருவதற்குத்தான் பயன்படும்.
ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, போராட்டத்தை நீங்கள் ஒழுங்குபடுத்துங்கள்.. போராடுகிறவர்களைத் தடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். மாறாகத் தடுத்தீர்கள் என்றால் அது எதிர்த்துப் போராடுவது என்கிற முறையில்தான் வரும்.
போராட்டத்தை தூண்டுவதுதான் கம்யூனிஸ்டுகள் வேலை..
இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய கல்வி அமைச்சர் ராஜ்மோகன், போராட்டத்தை தூண்டுகிறார்கள், பொதுமக்களுக்கு இடையூறாக நடத்துகிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். யாருடைய தூண்டுதலாலும் அந்தப் போராட்டம் நடைபெறவில்லை.
போராட்டத்தைத் தூண்டுவதுதான் எங்கள் வேலை.. நாங்கள் போராட்டத்தைத் தூண்டுவோம். அதற்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தைத் தூண்டிவிடவில்லை. டெல்லியிலே அடிச்ச அடி, நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தெருவுக்கு வந்து, அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் அவர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்துகிற முறை கடுகளவு கூட ஏற்க முடியாது. கல்லூரியில் உள் புகுந்து மாணவர்களைக் கைது செய்வது, முன்னெச்சரிக்கையாக கைது செய்வது, கல்லூரி வளாகத்துக்குள் சென்று கைது செய்வது போன்ற அத்துமீறிய நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை ஈடுபட்டிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு காவல்துறையின் இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எடுக்க வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.
