குதிரை பேர வழக்கு விவகாரம்: நீதிமன்றம் வந்த செந்தில் பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் பெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 24) காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, கொறடா உத்தரவை மீறி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ‘குதிரை பேரம்’ நடத்திய புகாரில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

கடந்த ஜூலை 8-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. 25 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பி இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், முன்ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்காக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share