டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர். காவல் துறையின் இந்த அடக்குமுறையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்திலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ ஏராளமானோர் திரண்டு தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இன்று 5-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடந்து வரும் போராட்டத்திற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி விளக்கம்:
இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வினாத்தாள் கசிவு என்பது சாதாரண பிரச்சினை அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த மிகுந்த வேதனையான விஷயம். வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனி விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டு, 5-ஆவது நாளாகச் சென்னையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
