அரசியலில் இருந்து விலகுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (Ramadoss) திடீரென அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் இன்று ஜூலை 25-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. 88-வது வயது தொடங்கினாலும் கூட, இன்று ஒரு நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலைப் பேச மாட்டேன்; அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால், வருகிறவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன், அவ்வளவுதான். அந்த வகையிலே அரசியலிலே நான் தலையிட மாட்டேன்.
அதை அன்புமணி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அவருக்கு அனைவரும் துணையாக இருப்பார்கள்.. நாங்களும் துணையாக இருப்போம். ஆகையால் என்னைப் பார்க்க வருகிறவர்கள் பார்த்துவிட்டு, ஐயா நலமா? என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம். அங்கே அரசியல் பேசுவதற்கு இடமில்லை. ஏனென்றால், இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
