தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி முதல், நடப்பு ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 கேரட் தரத்தில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. .
குழந்தைகளுக்கு தேவை பால்.. தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்… தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை.. சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது..
ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது.. தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான்.. என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
